திங்கள், நவம்பர் 28, 2005

இதைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?


இந்த முறை நான் ஜெகனை பார்த்த போது சிறிது இளைத்திருந்தான்.
“ஏண்டா இப்படி இளைச்சிட்ட?” எனக் கேட்ட போது “இல்லைடா. ஜாகிங்க்கும் ஜிம்முக்கும் போறதால அப்படி.”என்று ஜெகன் மந்தகாச புன்னகையுடன் கூறினான்.கூடவே இரண்டு மூன்று pose களில் நின்று தன் ஜிம் பாடியை காட்ட முயற்சித்தான்.
“இங்க பாருடா குண்டா, இதுதான் triceps, இதுதான் biceps எப்படி திரண்டு வருது பார் ” என கைகளை காட்டினான்.எனக்கு எல்லாமே மொத்தமாக தெரிந்தும் ஜெகனின் ஆறுதலுக்காக “ ஆமாண்டா நல்லா பாடியை டெவலப் பண்ணிட்டே “ எனக்கூறியதும் மிகவும் உற்சாகமாக front pose. Back pose வேறு காட்ட ஆரம்பித்துவிட்டான்.என் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ஒருவழியாக ஜெகனை அமைதிப்படுத்தி அமரவைத்தேன்.

இந்த களேபாரங்களால் தூக்கம் கலைந்த ரியாஸ் “ ஏண்டா மணி 2 தானே ஆகுது.அதுக்குள்ள சத்தம் போட்டு எழுப்பிட்டீங்களே ” என்றபடியே ஒருவாறு எழுந்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்..நானும் ஜெகனும் ஒருவரையொருவர் பார்துக்கொண்டோம்.மணி பிற்பகல் 2 மணி. “அப்புறம் ஜெகன் எப்போ வந்தே? “ என்ற ரியாஸிடம் “ இப்போதான் மாப்ளே ! சிகெரெட் கொஞ்சம் கொடு “ என வாங்கி இரண்டு puf அடித்துவிட்டு தந்தான்.

நான், ஜெகன், ரியாஸ் மூவரும் கல்லூரி நண்பர்கள்.நான் சென்னையில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தேன்.அங்குதான் ஜெகனும் ரியாசும் விடுமுறைக்கு வந்திருந்தார்கள்.வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு பேச்சு ஜெகனைப் பற்றி திரும்பியது.

“ ஏண்டா ஜெகன் ஏன் இத்தனை நாளா ஒரு phone கூட பண்ணலே? “ என்றேன்.

“ இல்லைடா குண்டா டைம் கெடைக்கல அதான் “

“ ஏன் நீ பெங்களூருக்கு STD போட்டு உன் ஆளோட மாத்திரம் பேசத்தெரியுதுல்ல ? எங்களோடையும் தான் பேசறது ?! “

“ போடா டேய் ஏன் புழுகுறே ? நான் அவளை எல்லாம் Cut பண்ணி ரொம்ப நாளாச்சு. அவளோட பேசியே ரெண்டு மாசம் ஆச்சு “ என பெருமிதமாக கூறினான் ஜெகன்.

எனக்கும் ரியஸுக்கும் ஆச்சரியமாகிவிட்டிருந்தது. ஜெகனை நம்பிக்கையில்லாமல் பார்த்தோம். “ ஏண்ட ஜெகன் பொய் சொல்றே ! நீயாவது அவளோட பேசாம இருக்கறதாவது “ என்ற ரியசை புழுவைப்போல் பார்த்து “போங்கடா நம்பாட்டி நான் என்ன பண்றது ? “ என கோபமாக கூறினான்.

நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. ஒருநாள் ஜெகன் என்னிடம் வந்து “ டேய் நவின் ஒரு பெண் தோழி வேணுங்கற தாகம் அதிகமாய்ட்டே வருதுடா. எப்படிடா புடிக்கிறது ? “ எனக்கேட்டான்.
“ என்ன ஜெகன் நம்ம காலேஜில இல்லாததா ? நீ எங்கே ?! காலேஜ் வந்தாலே படிச்சிட்ட்டு சீக்கிரம் போக சொல்லிருவாங்கன்னு வர்றதேயில்ல ! “ என்றேன்.
“ அதெல்லாம் இல்லடா நாளைல இருந்து நானும் உன் கூட வர்றேன் !” என உற்சாகமாக கூறினான்.

பின் வந்த நாட்களில் ஜெகன் 9:30 to 10:00 Break time-ல் மாத்திரம் கல்லூரிக்கு வர ஆரம்பித்தான். வழியில் போகும் வரும் பெண்களிடமெல்லாம் அவர்களின் பெயரைக் கேட்க ஆரம்பித்தான். “ டேய் டேய் அவங்க Lecturer டா Complaint போச்சுன்னா காலேஜ்ல பொளந்துடுவானுங்க ! “ என் வார்த்தைகள் குப்பையில் போடப்பட்ட்டது. ஜெகன் போகிற வேகத்தைப்பார்த்தால் தெருவுக்கு ஒரு தோழியை ஏற்படுத்திவிடுவான் போல் தோன்றியது.

இதற்கிடையில் எனக்கு அவசர வேலையாக ஊருக்குச் செல்லவேண்டியிருந்ததால் சென்றுவிட்டேன். நான் ஒரு வாரம் கழித்து திரும்பியபோது ஜெகனின் முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தோடியது.
“ குண்டா நான் புடிச்சுட்டேன் ! “ என ஜெகன் குத்து dance ஆடினான். எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. “ ஏய் யார்டா அந்தப் பொண்ணு ? “

“ பொண்ணு Local தான். நம்ம காலேஜ் இல்லே ! PUC படிக்கிறா ! “ என்றான்.
“ டேய் எனக்கு ஒருநாள் introduce பண்ணிவைடா “
“ பார்க்கலாம் “ எனக்கூறிவிட்டு “ அச்சச்சோ ! அவ வர்ற நேரம் ஆச்சு ! “ என பதறி ஓடினான்.

அதன்பின் ஜெகனைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டிருந்தது. எங்களிடம் பேசுவதையே மறந்துவிட்டிருந்தான். பார்தாலும் “ ஹலோ “ சொல்லிவிட்டு ஓடினான். தனது class ஐ cut செய்துவிட்டு அவளைக் கொண்டுபோய் PUC college ல் விட்டுவந்தான். ஆமைக்கே சவால் விடும் வகையில் நடக்கும் ஜெகன் “ Ben Jonson “ னாக மாறி ஓடிக்கொண்டிருந்தான். நிறுத்திக்கேட்டால் “ அவ அந்தப்பக்கம் வர்றாடா , நான் அவளுக்கு முன்னாடி போய் அவ எதுத்தாப்புல வரணும் அதான் “ என ஓட்டத்தைத் தொடர்ந்தான். அவள் கல்லூரி செல்லாத நாட்களில் தனது ரூம் phone முன்பு தவமிருக்க ஆரம்பித்தான்.

நிலவில் வாழமுடியுமா ?
முடியாதா ?
என்பதுபற்றியெல்லாம்
எனக்கு கவலையில்லை
நான் நிலவோடு
வாழ்ந்துகொண்டிருப்பவன் ! “
- தபூ சங்கர்.




இவ்வாறாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில் தான் நானும் ஜெகனும் ரியாசும் சென்னையில் சந்தித்தோம்.

“ ஏண்டா ஜெகன் ! உன் நிலவுக்காதல் என்ன ஆச்சு ? அம்பிகாபதி அமராவதிகப்புரம் நீயும் உன் நிலவுந்தான்னு நான் நெனைச்சுகிட்டு இருக்கேன். ஏன்?” என்றேன்.

ஆமாண்டா குண்டா ! நானும் propose பண்ணி ஒரு வருசம் ஆச்சு. அவ அதுக்கு பதில் சொல்லவே மாட்டேங்கறா. அதைப்பத்தி கேட்டாலே Off ஆய்டறா ! போடி சரிதான்னு வந்துட்டேன்.” என்றான்.

“ என்ன ஜெகன் நீ சொல்றதெல்லாம் உண்மையா ? “ என்ற ரியாசிடம் “ ஆமா மாப்ளே .தவிர நம்ம காலேஜ் பொண்ணுங்களை வேற பார்த்தேன். கைல வெண்ணைய வச்சுகிட்டு ஏன் தேவையில்லாம இவ பின்னாடி அலையனும்னு இப்பதான் எனக்கு ஞானோதயம் வந்துச்சு. “ என்றவன் “ இனிமேல் அவளைப்பத்தி பேசாதீங்க ! தெர்தா ! என எச்சரிக்கை எங்களுக்கு விடுக்கப்பட்டது. ‘ சரிதான் பயல் இனிமேல் ஒழுங்கா காலேஜ் போவான் ‘ என சந்தோஷப்பட்டோம்.

இதற்கிடையே செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டது. எனக்கு சில அரியர்ஸ் இருந்ததால் ( அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜங்க ! ) பெங்களூருக்கு சற்று முன்பே புறப்பட்டு வந்தேன். ரியசும் ஜெகனும் வந்திருந்தனர்( எல்லாரும் ஒரே குட்டைல ஊரின மட்டைகதான் !). பெங்களூரின் climate க்கு எங்களைப் பழக்கப்படுதிக்கொண்டோம்.

“ குண்டா பார்த்தியா இன்னியோட மூனாவது வாரம்! அவளோட பேசவேயில்லையே ! “ என ஒரே attempt ல் எல்லா அரியர்ஸையும் க்ளியர் செய்தது போல் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். நானும் ரியாசும் ஜெகனை நினைத்து ஆச்சரியப்பட்டோம்.

அன்று மாலை எங்களுடன் walking வரும்போது ஜெகன் எதோ வெளக்கெண்ணெய் குடித்ததுபோல் உற்சாகமில்லாமல் வந்தான். “ ஏண்டா ஜெகன் நானும் குண்டனும் மட்டும் பேசிக்கொண்டு வர்றோம் நீயும் ஏன் எங்க discussion ல் கலந்துக்க கூடாது?” என்ற ரியாசிடம் “ ஆமா பெரிசா அணுகுண்டு வெடிகிறதைப்பத்தி Discussion ! போங்கடா !” என ஜெகனால் கடிக்கப்பட்டு வாய் மூடிக்கொண்டோம்.

அடுத்த நாள் ஜெகன் அமைதியின்றி காணப்பட்டான். மாடியிலிருந்து கீழும் மேலும் நடைபோட்டான். பல சிகரெட்டுகளை சாம்பலாக்கினான். மாலையில் வந்த ஜெகன் பக்காவான ‘ கெட் அப் ‘ பில் இருந்தான்.

“ கொஞ்சம் wait பண்ணு ஜெகன் கெளம்பிட்டேன் ! போகலாம் !” என்ற என்னை ‘ அற்பனே ! ‘ என்ற பார்வை பார்த்து “ இல்லைடா நான் இனிக்கு walking வர்லே ! நீயும் ரியாசும் மட்டும் போங்க !”
“ ஏண்டா ? “

“ அவ Phone பண்ணியிருந்தா ! என்னை அவ வீட்டுக்கு Invite பண்ணியிருக்கா ! அதான் ! “ என்று சற்றே நாணத்துடன் கூறினான்.
அன்று இரவு திரும்பிவந்த ஜெகனிடம் “ ஏண்டா மெட்ராஸ்ல வந்து அவளைப்பத்தி ‘ ஆ ஊ ‘ ன்னு அறிக்கைவிட்டே ! இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே ? “ என்ற என்னிடம் “ இல்லைடா குண்டா அவளைப் பார்த்ததுக்கப்புறம் எனக்கு எல்லாமே
மறந்திருச்சுடா ! “ என பரிதாபமாகக் கூறிவிட்டு அவள் நினைவுகளில் ஆழ்ந்தான்.

“ உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம் “
- தபு சங்கர்



வியாழன், நவம்பர் 24, 2005

ஒரு கோப்பை பீர்





“ டேய் ஒவ்வொரு சொட்டும் தேன் மதிரி இருக்கும்டா !! “ என் நண்பன் ஜெகன் கூறுவதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் காலேஜில் சேர்ந்திருந்தேன். ஜெகன் என் ரூம் மேட்.. நான் அப்பொழுது பார்க்க மொடாக்குடிகாரன் மாதிரி தோற்றமளித்தாலும் அதிகபட்சமாக டீ தான் குடித்திருந்தேன். ஆனால் யாரும் என்னை நம்ப மறுத்தனர். சில பல நாட்களில் என் கூற்றை ஏற்றுக்கொண்டு “ ஆகாவளி ” என செல்ல பெயரும் கொடுத்தனர் என் நண்பர் குழாம்.

எங்கள் hostelல் ஒவ்வொரு சனிக்கிழமையும் free night. அன்று மட்டும் நாங்கள் ஹோட்டலில் சாப்பிடவேண்டும். மற்ற நாட்களில் “ விதியே “ என ஹாஸ்டல் சாப்பாட்டை தான் உள்ளே தள்ளவேண்டும். சனிக்கிழமை காலையில் இருந்தே
“ குடிமக்கள் ” பல கனவுகளில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள். கூட சாப்பிடும்போது “ என்னடா குண்டா ( அடியேன்தான்! ) உனக்கு என்ன பீர் ஆர்டர் பண்ணட்டும்? “ என நக்கலாகக் கேட்டு கலாய்ப்பது வழக்கம். ஒரு பீரை உள்ளே தள்ளிவிட்டாலோ அப்பா! ஆட்டம் தாங்காது. நானுண்டு என் பட்டர் சிக்கன் உண்டு என நான் இவர்களின் ஆட்டங்களை ரசித்திருப்பேன். தவிர அவர்களின் side dish களையும் கருமமே கண்ணாக உள்ளே தள்ளிக்கொண்டு இருப்பேன்.

குடிகாரர்களின் குழாமில் நான் குடிக்காமல் இருப்பதால் எனக்கு கணக்குப்பிள்ளை பதவியும் கிடைத்தது. ( மப்பில் அவர்களுக்கு பில் சரிபார்க்கத்தெரியாதாம் !! ). இவ்வாறு அமைதியாக சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் நான் கேட்ட ஒரேயொரு கேள்வி மாற்றிவிட்டது. தெரியாத்தனமாக என் ரூம் மேட் ஜெகனிடம் “ ஏண்டா இந்த பீர் எப்படி இருக்கும் ? “ கேட்டதுக்குதான் ஜெகன் முதல் பாராவில் சொல்லிக்கொண்டிருந்தான்.

என் கேள்வி என் நண்பர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து விட்டது. அவ்வளவுதான் “ கொலகொலையா முந்திரிக்கா “ ரேங்சுக்கு என்னைச்சுற்றி உட்கார்ந்து கொண்டு விளக்கம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் யாரிடமாவது Engineering Mechanics ல் doubt கேட்டிருந்தால் ‘தெரித்து’ ஓடியிருப்பார்கள். பல விளக்கங்கள் சொல்லி குருடனுக்கு யானையைப் பற்றி விளக்குவது போல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
“ சரி குண்டனுக்கு பீரை டேஸ்ட் செய்ய ஆசை வந்துவிட்டது “ நண்பர்கள் declare செய்தார்கள். “ ஐய்யையோ ! டேய் டேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல ! சும்மாதான் கேட்டேன் !” என் கூக்குரல் காற்றில் கரைந்துபோனது.

“ சரி இந்தவாரம் சனிக்கிழமை குண்டனுக்கு opening ceremony பண்ணிடுவோமா? “ பீர் பாட்டில் மூடியைப்பார்த்தாலே மப்பாகிபோகும் ஹரி கேட்டான்.
“ சே சே சும்மாயிருங்கடா குண்டனுக்கு வேண்டாம் !” இது ஜெகன். “ ஆகா என்னதான் இருந்தாலும் என் ரூம் மேட் தான் என்னை சரியா புரிஞ்சு இருக்கான் !” என்ற நன்றிப்பெருக்கோடு ஜெகனை நான் பார்க்க ஜெகன் தொடர்ந்தான்.
“குண்டன் என்ன சும்மவா என் ரூம் மேட்..ஆப்ப சோப்பையான நாளிலேயா அவனுக்கு மலையேற ( வேறென்ன குடிக்கதான்! ) கத்து தர்றது ? அதான் ரெண்டு வாரத்துல New Year வருதே. அன்னிக்கு வச்சுக்குவோம். வருச ஆரம்பத்துல பீரை உள்ள தள்னாதான் வருசம் முழுசும் தள்ளுவான்“ .
' ஆஹா என்ன ஒரு சிந்தனை. அட ரூம் மேட் கவுத்துட்டயேடா! ' விதியை நொந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். ஜெகனின் இந்த தீர்மானம் பலத்த கரவொலிகளுக்கு நடுவே நிறைவேறியது.

அடுத்து வந்த இரு வாரங்களும் எனக்கு First night க்கு செல்லும் பெண்ணுக்கு நடக்கும் உபதேசம் போல பல அனுபவ குடிநண்பர்களிடமிருந்து மனாவாரியாக Advise கள் கிடைத்தன.

“ மாப்ளே ! மூடியைத் திறந்தோடனபொங்கிவர நுரையை அப்படியே நுங்கு உறிஞ்சறமாதிரி உறிஞ்சுனேன்னு வையி. அதாண்டா டேஸ்டே ! “ இது ரியாஸ்.

“ டேய் குண்டா பீரை open பண்ணினோடயே ஒரே மூச்சுல பாட்டிலை காலி பண்ணினாதான் அது பீரு இல்லைனா அது வெறும் மோரு ! “ இது ஐந்து பாட்டில் பீர் அடிச்சாலும் அசராத ராஜேஷ்.

“ பீரும் காதலும் ஒன்னுதான் மச்சி. பீரையும் காதலையும் ‘ பட் ‘ ன்னு open பண்ணணும். இல்லேன்னா பொங்கிடும் “ இது காதல் மன்னன் அசோக்.

“ பீர் அடிச்சுட்டு பாட்டிலை கவுத்துடா நீ கவுந்துடாதே! அப்புறம் உன்னய தூக்க ‘ பொக்லேன் ’ தான் வரணும் “ பயமுறுத்தினான் ரவி.

இப்படியாக அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட மஞ்சள் தெளித்த ஆடு மாதிரி தயார் செய்யப்பட்டேன்.

ஒருவழியாக அந்த நாளும் வந்தது. Bar ல் எனக்கு இருமருங்கிலும் பீர் அடித்து கொட்டை போட்ட அனுபவஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். எனக்கு ஒரு பாட்டில் பீர் ஆர்டர் செய்யப்பட்டது.எனக்கு முன் ஒரு கோப்பையில் பீர். பீருடன் கோப்பையைப் பார்க்க அழகாகதான் இருந்தது. மீன் தொட்டியில் aerator போட்டால் வரும் குமிழிகளைப் போல் சும்மாவே வந்துகொண்டு இருந்தது. பொன்னிறத்தில் பீர் என்னைப்பார்த்து கண்ணடிதுக் கொண்டிருந்தது.

“ மாப்ளே ‘ Cheers ! “ சொன்னதுக்கப்புறம் பீரை sip பண்ணிட்டுதான் கீழே வக்கனும் .அது தான் ! Party manners “ என் ரூம் மேட் ஜெகன் என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

“ இவ்ளோ நாளா நம்ம class mate டா இருந்த குண்டன் இன்னில இருந்து Glass mate ஆய்ட்டான். அவனுக்கு ஒரு ‘ ஓ ‘ போட்டு Cheers சொல்லுங்கடா ! “

“ Cheers ! “

பல கோப்பைகள் என் கோப்பையை முத்தமிட்டுச்சென்றன. வெட்கத்துடன் கோப்பையை sip செய்தேன். “ Yea!! “ நண்பர்கள் ஆர்ப்பரித்தனர். என் முகம் பச்சைப் புளியங்காயை மென்றவன் போல் ஆனது.
“ என்னடா இப்படி இருக்கு ! “ பரிதாபமாக கேட்டவன் வாயில் சூடான கோழிக்கால் தினிக்கப்பட்டது.

“ மச்சி ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் ! போக போக பாரேன் சும்மா தூக்கிடும் ! “ அனுபவஸ்தவர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்.

கசப்பும் துவர்ப்பும் சேர்ந்தமாதிரி ஒரு சுவை எப்படித்தான் இதை குடிக்கிறார்களோ !!! ஐயகோ மாட்டிக்கொண்டேனே!! அதன் மணம் வேறு என் குடலைப் புரட்டியது. ஒரு ப்ளேட் சிக்கன் 65 காலி செய்தேன்.

“ டேய் குண்டனை அடக்கு. டாய் பீரையும் சேர்த்து உள்ள தள்ளு! எஸ்கேப் ஆகாதே !! ஆங்காங்கே குரல்கள் எழுந்தன.

சரி ஆவது ஆகட்டும் என ஒரே மூச்சில் முக்கால் mug கை காலி செய்தேன்.
“ அவ்வளவுதான் மாப்ளே common you can make it !!!” எதோ ஒரே ஓவரில் ஆறு sixers அடித்த Batsman ரேஞ்சுக்கு எனக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அனைத்து பாராட்டுகளையும் century அடித்த சச்சின் போல தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

இரண்டே நிமிடங்கள்தான் என் முகத்தை புன்னகை தவழ வைத்துக்கொண்டிருக்க முடிந்தது. அதன் பின் எல்லாம் முடிந்தது.பீர் தன் வேலையைக் காட்டத்தொடங்கியது. Automatic காக என் முகம் விளக்கெண்ணெய் குடித்தவன் போல் ஆகியது. மானாவாரியாக ஏப்பம் வரத்தொடங்கியது. ஏப்பமெல்லம் பீர் நாற்றம் !!! .குடலைப் புரட்டியது. French Fries சும் Thangri kabab களும் கூட என்னைக்காப்பற்ற முடியவில்லை. இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது. ‘ தேன் மாதிரி இருக்கும்னு சொல்லி என்னைக் கவுத்திட்டீங்களேடா !!! ‘
“ எங்கேடா டாய்லெட் !!!” அலறிக்கொண்டே ஓடினேன்.



செவ்வாய், நவம்பர் 22, 2005

ஏற்கனவே...





“ ஏண்டா ! இங்க மெட்ராஸ்ல தான் Differrent Language கத்துக்கறதுக்கு சான்ஸ் இருக்கே ஏன் different ஆ ஏதாச்சும் ட்ரை பண்ண கூடாது?” அருண் கேட்டபோது நாங்கள் மதியம் குறிஞ்சி ஓட்டல் பிரியாணியை வெட்டிவிட்டு சாப்பிட்ட மப்பில் இருந்தோம்.

“ என்ன இந்தி படிக்கலாமா ? இல்ல தெலுங்கு ? கேட்ட ஆனந்தை “ அற்பனே ! “ என்ற பார்வை பார்த்தேன். அதை புரிந்துகொண்டு “ சரி நீயே சொல்லு பார்க்கலாம் !” என்றான்.

“ ஏண்டா லோக்கலாவே இருக்கீங்க ? வாங்க international level க்கு French, German இல்ல Russian என்ன சொல்றீங்க ? “

“ super டா நான் ரெடி! அருணிடமிருந்து வந்த ஆதரவினால் என் கோரிக்கை மெஜாரிட்டி பெற்று German படிப்பது என தீர்மானம் நிறைவேறியது. படிப்பதற்கு கம்பெனியில் இருந்து லோன் அரேன்ச் பண்ணிதர ஆனந்த் ஒப்புக்கொண்டான்.

தினமும் சாயங்காலம் 3 மணி நேரம் வாரம் 6 நாட்கள் என ஒரே மாதத்தில் எங்கள் German அறிவை வளர்த்துவிடுவதாக மார்தட்டினாள் அந்த Councellor.மேலும் இது summer crash course இதைவிட்டால் நீங்கள் 4 மாதம் part time படிக்கவேண்டும் என கூறியதால் ஒரு மாதத்திலேயே எங்கள் German பசி தீர்க்க வேண்டிய எங்கள் ஆவலினால் சேர்ந்தோம்.

German வகுப்பு முதல் நாளே களைகட்டியது. எங்கள் வகுப்பு மொத்தம் 15 பேர்தான். அதில் 5 பெண்கள் மீதமுள்ள ஆண்களில் 5 வது படிக்கும் மகேஷ் முதல் Retired ஆகி 6 வருடம் ஆன அய்யாவு வரை அனைவரும் இருந்தனர்.

எந்த நாட்டு மொழி படித்தால் என்ன? நம்ம கலாசாரத்தை விட்டுகொடுக்க முடியுமா? நம் குலவழக்கப்படி ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் தனிக்குழுவாகவும் அமர்ந்திருந்தனர். நல்லவேளை எந்த தாத்தாவும் பாட்டியை படிக்க அனுப்பவில்லை போலும், but எல்லா party யும் 50 மார்க்குக்கு மேல் தாராளமாக கொடுக்ககூடிய level-ல் இருந்தது.

என்னதான் தேனி கூட்டம் இருந்தாலும் ஒரேயொரு ராணி தேனி இருப்பதைப் போல் அந்த குழாமில் ஒரே ஒரு பெண், எங்கள் பாஷையில் சொல்வதென்றால் super figure பெயர் ரேகா எனக்கூவியது. ரேகாவிற்கு மருண்ட விழிகள், சிரித்தால் குழிவிழும் கன்னம் ( ஒரு பக்கம் மட்டும் ) பால்கோவா நிறம், அழகான உடல்வாகு, நீண்ட கூந்தல் என சொல்லிக்கொண்டே போகலாம். ரேகா ரோட்டில் நடந்து போனால் கடப்பவர்கள் நிச்சயமாக ஒருமுறை திரும்பி பார்க்காவிட்டால் ஒன்று அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் இல்லை பெண்களாக இருப்பார்கள். “ கல்லை கண்டால் நாயை காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் “ என்பது போல அழகான பெண்களுக்கு நல்ல குரல் இருக்காது, நல்ல குரல் இருந்தால் அழகு இருக்காது. ஆனால் இது எதுவுமே ரேகாவிடம் apply செய்யமுடியாது. ஏனெனில் ரேகா பேசினால் ஏன் இருமினால் கூட அதில் ஒரு ரிதம் இருந்தது.

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
- தபு சங்கர்

( “ போதும்டா ஊத்துனது மேல சொல்டா ! “ என நீங்கள் கேட்பது புரிகிறது. இன்னும் ஒரேயொரு பெண்ணைப்பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.)

“ மாயா “ ! பேரைப்போலவே மாயாஜாலம் செய்யும் பிகர். ரேகா அழகென்றால் மாயா ஒரு ஆர்ப்பாட்டம். மாயாவிற்கு பாவம் Elementary school ல் எடுத்துக்கொடுத்த Dress தான் இன்றும் அவர்கள் வீட்டிலே பிறந்து 16 வருடங்கள் ஆனாலும் அவர்கள் பெண் இன்னும் ஒரு குழந்தை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும். Dress எல்லாம் இவ்வளவு tight –ஆ இருக்கே பாவம் மூச்சுவிடவே ரொம்ப சிரமமாக இருக்குமே என பரிதாபப்படுவோம் நாங்கள். ஆனால் மாயா மூச்சு விட்டாலோ நங்கள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவோம். மாயாவின் Tailor வேறு சுரிதார் கழுத்தில் தன் திறமையை நிரூபிக்க எத்தனித்து ஏகத்துக்கு வெட்டித்தள்ளிவிட board டை பார்ப்பதா இல்லை tailor ன் திறமையைப் பார்ப்பதா என ஏகத்துக்கு எங்கள் கண்கள் தத்தளித்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜெர்மன் வேறு சுவாரஸ்யமாக இருந்தது.
“ சே! Free time ல் extra ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளலாமென்றால் எவ்ளோ distraction ! பேசாமல் பச்சோந்தியைப் போல இரு கண்களுக்கும் இரு different Vision இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் ” பெருமூச்சு விடத்தான் முடிந்தது. இப்படி என் மூளை multitasking ல் அல்லாடிக் கொண்டிருக்க அருணும், ஆனந்தும் இந்த கவலையே இல்லாமல் ஏதோ ஜெர்மன் இலக்கணத்தையே போய் மாத்தப்போற மாதிரி விழுந்து விழுந்து கற்றுக்கொண்டு இருந்தார்கள்.

German ல் வாக்கியம்( sentence ) அமைத்து பேசுவது ஒரு பயிற்சி. அனைவரும் exercise book ல் இருந்ததையே கிளிப்பிள்ளை மாதிரி படிக்க நாங்கள் மட்டும் ஆனந்த் உதவியுடன் burger ரை பஜ்ஜியக்கி sauce சை சட்டினியாக்கி பேசிய டையலாக் மிகுந்த வரவேற்பை பெற்றது. அன்று முதல் எங்கள் டீம்மிக்கு டையலாக் வந்தாலே அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.நாங்களும் அவர்களை ஏமாற்றாமல் சமாளித்தோம். ( பின்னே ரேகா வேறு பார்க்கிறா சிரிக்கிறா சும்மாவா? ). இதனால் நான் வேறுவழியின்றி ஆனந்தின் extra உதவியுடன் ஜெர்மன் கற்றுகொள்ள ஆரம்பித்தேன். மாயாவேறு அடிக்கடி தன் பேனாவைத் தவறவிட்டு எங்கள் கவனத்தை சிதறடித்துக் கொண்டிருந்தாள். இருப்பினும் எங்கள் அறிவு தாகம் ரேகாவிற்காக மேலும் வலுவடைந்தும் கொண்டிருந்தது.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த வண்டி பஞ்சரானதைப் போல் ஆனந்துக்கும் அருணுக்கும் ஆபீஸில் shift மாறிவிட்டது. அவர்களால் இனி evening class க்கு வரமுடியாது. ‘ ஐயகோ ! இனி என்ன செய்வேன் ? ‘ என மனது புலம்பினாலும்
‘ சரி வேறு வழியில்லேன்னா ஜெர்மன் சொந்தமா படிக்க வேண்டியதுதான். ஆனந்தும் அருணும் பகல் நேர வகுப்புக்கு மாறிக்கொள்ள, நான் மட்டும் இப்பொழுது class-ல். ஒரு வழியாக competitors ஒழிந்தார்கள் என சந்தோஷமாக இருந்தாலும், ஆனந்தை வைத்து ஒப்பேத்திக்கொண்டிருந்த ஜெர்மன் dialougues ஐ எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. பின்வந்த நாட்களில் இரவில் ஆனந்திடம் ஜெர்மன் சந்தேகங்களை கேட்ட என்னை வினோதமாக பார்த்த ஆனந்த் “ என்னடா engineering exam க்கே இப்படி படிக்க மாட்டே, என்ன விஷயம் ? “ என்றவனை “ டேய், இப்பவாச்சும் உருப்படலாமேன்னு “ எனக்கூறி தற்காலிகமாக அமைதிப்படுத்திவைத்தேன்.

இத்தனை நாளும் எங்கள் டீமைப் பார்த்து சிரித்துவந்த ரேகா இப்பொழுது தனித்துவிடப்பட்ட என்னைப் பார்க்க ஆரம்பித்தாள். நானும் ஆனந்திடம் tution பெற்று class-ல் பழைய dignity-ஐ வேறு maintain செய்திருந்தேன். அதுவரை ரேகாவின் பார்வையை சாதாரண tonic காக எடுத்துக்கொண்டிருந்த நான் பின் வந்த நாட்களில் அந்த tonic என்னுள் ஏதோ chemical-ஐ சுரக்க வைத்ததை உணர ஆரம்பித்தேன்.

என்னைத்தான் பார்க்கிறாளா, வேறு யாரையுமா என்ற என் சந்தேகத்தை சில டெஸ்டுகள் வைத்து தீர்த்துக்கொண்டேன். ( அவளின் நேர் பின்னால் கடைசி bench-ல் அமர்ந்தேன் - திரும்பிப் பார்க்கிறாள், கூட்டத்தில் ஒளிந்து அமர்ந்தேன் - தேடுகிறாள்)
எங்கள் கண்கள் பலமுறைப் புணர்ந்தன. பின் வந்த நாட்களில் என் தூக்கம் என்னிடமிருந்து Volantary Retirement வாங்கியிருந்தது. அப்படியே உணர்வுகளை ஏமாற்றி கண்களை மூடினாலும் டிசைன் டிசைனாக “ FTV” ரேஞ்சுக்கு என் கனவில் ரேகா CatWalk நடத்தி ரேகா என்னை சாகடித்தாள்.

இதற்கு முன் யாராவது
இப்படி உன்னைப் பார்த்ததுண்டா?
எப்படி?
“ ஹய் பொம்மை ! “ என்று !

- தபு சங்கர்

வழக்கமாக நண்பர்கள் யாராவது இது போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் என்னிடம்தான் Consultation க்கு வருவார்கள். ( “ டேய் ! ரொம்ப அலப்பரை உடாதே ! “ என நீங்கள் கத்துவது கேட்கிறது. என்ன செய்வது என் மீது அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை ) இரண்டு மூன்று கேள்விகளில் அவர்களின் நோயை உறுதிப்படுத்திவிடுவேன்.. ( நோய் என்னடா என்கிறீர்களா? காதல் நோய்தான்! ) ஆனால் எனக்கு என்று வரும்போது அவ்வாறு உடனே முடிவு எடுத்து Declare செய்யமுடியவில்லை. எந்த கனத்திலும் காதல் எனக்கூறி Sixer வாங்கிவிடக்கூடாது என உறுதியாக இருந்தேன்.

எனவே எப்படி Chemistry Lab-ல் சில Confirmatory Test செய்வார்களோ அதைப்போல சில டெஸ்ட்களை வைக்க ஆசைப்பட்டேன். என்னைத்தான் பார்க்கிறாளா? – ஆமாம் . சில சமயம் நான் வரும்வரை அவள் தேடுகிறாள் என அறிந்தேன். இறுதி நாள் நெருங்க நெருங்க எங்கள் பார்வைகளின் frequency யும் கன்னா பின்னாவென எகிறியது. சரி ஆவது ஆகட்டும் இன்னும் Class முடிய 2 நாட்கள்தான் முடிந்துவிட்டால் பார்ப்பதே அரிதாகிவிடும். சரி என்ன பண்ண போறே? எனக்கு நானே கேட்டபொழுது வெளிப்பட்ட ஐடியாதான் Card கொடுப்பது.

கஷ்டப்பட்டு ஒரு Card ஐ select செய்து அதில் என் பெயரையும் போன் நம்பரையும் எழுதி என் இதயத்தில் வைத்தேன். ( Pocket ல தான். அது என் இதயத்துக்குப் பக்கத்துலதானே இருக்கு ?! )

அடுத்த நாள் Class ஆரம்பிக்க 5 நிமிடத்துக்கு முன்பே வந்தேன். என்ன ஒரு Co- incidence ?! நான் வந்து என் Bike கை நிறுத்தவும் ரேகா நுழையவும் சரியாக இருந்தது. தலையைக் குனிந்தபடியே என்னை கடக்க ம்முற்பட்ட ரேகாவை,

“ Excuse Me ரேகா “

“ Yes “ என்று நிமிர்ந்து பார்த்தவளிடம் என இதயத்தில் இருந்த Card ஐ எடுத்துக்கொடுத்தேன்.

“ What is this ? “ என வாங்கியவளிடம்

“ Open பண்ணிப்பாரு தெரியும் “ எனக்கூறிவிட்டு நடந்தேன்.

( “ யப்பா ஒரு கொலை செய்யக்கூட தைரியம் வேண்டாம். ஒரு பெண்ணிடம் Propose செய்வது இருக்கிறதே ! அய்யோ Great தைரியம் வேண்டும் Brother )

Class ஆரம்பித்தது. வழக்கம் போல் எங்கள் பார்வைகள் தொடர்ந்தன. ( Yes ! Workout ஆய்டுச்சு போல இருக்கே!! ) மனதுக்குள்ளேயே குத்து டான்ஸ் ஆடினேன். ரேகாவோடு என்னுடைய பைக்கில் ECR ல் பறந்தேன். Tea Break ல் ரேகாவிடம் கேட்டேன்.

“ So ! எப்போ எனக்கு Call பண்ணபோறே? “
“ No ! I wont ! “ என மறுத்தாள்.
“ ஏன் ? “
“ I already have one ! “
“ excuse me ! “
“ I already have one ! ”
“ Ok ! Pen இருக்கா? “
கொடுத்தாள். கார்டை திரும்ப வாங்கி ரேகாவை அடித்துவிட்டு மாயா என்று எழுதினேன்.




“ இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றை கூட
எவ்வளவு சுலபமாய் பொய்யாக்கிவிடுகிறாய்?
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
எனகின்ற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்ன புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே ! “

- தபு சங்கர்

வெள்ளி, நவம்பர் 11, 2005

கள்ளினும் காதல் இனிது


வருடம் 1994. ஒரு அழகான மழை விட்ட தினம்.

கடிகாரம் 12 முறை அடித்தது. நான் அறையில் டிராயிங் போட்டுக்கொண்டிருந்தேன்.மாறன் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான்.

“ டேய் நவீன் வாடா ! மணியாச்சு காலேஜ் விட்டுடுவாங்க “ மாறன் என்னை கிளம்ப சொல்லி அவசரபடுத்தினான்.

“ இருடா கொஞ்சம்தான் இருக்கு. முடிச்சுட்டு வந்திடறேன்” என்ற என்னிடம்
“ இப்போ நீ வரலைன்னா நான் போறேன்” என கோபித்துகொண்டு கிளம்பியவனை
“ இரு வர்றேன் “ என எடுத்து வைத்துவிட்டு கிளம்பினேன்.

மாறன் எனது நெருங்கிய நண்பன்.ஓரே அறையில் வசித்துவந்தோம்.எங்கள் அறை ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்க்கு எதிரில் உள்ள தெருவில் இருந்தது. நாங்கள் அந்த ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். ஆர்ட்ஸ் காலேஜ் விடும் நேரம் நானும் மாறனும் அருகில் இருக்கும் டீ கடையில் டீ குடித்துக்கொண்டே காலேஜிலிருந்து வரும் பெண்கலை ‘ சைட் ‘ அடித்துக்கொண்டிருப்போம்.பஸ் ஸ்டாப் வேறு டீ கடை அருகில் இருந்ததால் பார்வைகளும் கமெண்ட்களும் விட்டுக்கொண்டிருப்போம்.எங்களால் தினமும் 10 – 15 டீ போணியாவதால் டீகடைகாரரும் எங்கள் தோஸ்த் ஆகிவிட்டார்.

“ டேய் நவீன் பாருடா அந்த பிங்க் சுரிதார். சூப்பரா இருக்காள்ல? “

“ சூப்பர்னு சொல்லமுடியாது.பரவாயில்ல ! “ என்றேன் நான்.

“ போடா ! ரசனை கெட்டவனே! சே! இந்த மாதிரி அழகான பொண்ணை இந்த காலேஜ்ல பார்த்ததே கெடையாதுடா” மாறன் உணர்ச்சிவசப்பட்டு கூறிக்கொண்டிருந்தான்.

ஓருசில நாட்களில் மாறன் பல வேலைகள் செய்து அந்த பெண்ணின் பெயர் ‘காஞ்சனா’ என தெரிந்துகொண்டான்.
“டேய் நவின் காஞ்சனாவை பார்த்தாலே ஒரு மாதிரி ஆயிடுதுடா ! என்னடா பண்றது?” மாறனின் முகத்தில் காதல் வேதனை தெரிந்தது.

“ ஏண்டா மாறா ! சைட் அடிச்சமா வந்தமான்னு இல்லாம என்ன காதலா காஞ்சனா மேல?” என்று கேட்ட என்னை பார்த்து வழிந்துகொண்டே ஆமோதித்தான்.

“ நவின் நான் எப்படியாச்சும் கஞ்சனாகிட்டே பேசப்போறேண்டா. அதுக்குத்தான் என்ன வழின்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்”

பஸ் ஸ்டாப் அருகிலேயே ஒரு போஸ்ட் பாக்ஸ் இருந்தது.வீட்டிற்கு கடிதம் எழுதுவது என்றாலே வேப்பெண்ணை குடித்தது போலாகிவிடும் மாறன் தினமும் ஒரு லெட்டர் வீட்டிற்கு, நண்பர்களுக்கு க்ரீட்டிங்ஸ் என காஞ்சனா பார்வையில் படும்படி போஸ்ட் பாக்ஸில் போஸ்ட் செய்தான்.காஞ்சனாவிற்கு கேட்கும்படி என்னிடம் கத்தி கத்தி பேசினான்.ஆனால் காஞ்சனாவின் கவனத்தை ஈர்த்தமாதிரி தெரியவில்லை.
ஒருநாள் மாறன் பஸ் ஸ்டாபில் போட்ட பெரிய தும்மலுக்கு எதேச்சையாக மாறன் இருந்த திசையில் திரும்பிப்பார்த்துவிட்டாள்.
“ டேய் என்னை பார்க்கிறாடா !! “ மாறனின் கூச்சல் பெரிதாயிருந்தது. அன்று முழுதும் ‘ கள் குடித்த’ குரங்கானான். “ நவீன் இன்னிக்கு உனக்கு ட்ரீட் வாடா! “ என்றவனைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

பின் வந்த நாட்களில் எனக்கு பல டீக்களும் , ஜூஸ்களும் மாறனால் sponsor செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் ‘ காஞ்சனா என்னை ஓரக்கண்ணால்
பார்த்தாள் ‘ என்றோ அல்லது ‘ டேய் நான் அன்னிக்கு தும்மின மாதிரியே அவளும் தும்மினாடா ‘ என்றோ புலம்பிக்கொண்டிருப்பான்.

“ நவின் சும்ம டீகுடிச்சுட்டு இருந்தாலாம் அவ கவனிக்கமாட்டாடா, ‘தம்’ அடிக்கலாம்னு இருக்கேன் “ மாறன் declare செய்தான்.

“ வேண்டாம்டா மாறா, இத்த்னை நாளும் ‘ தம், தண்ணி ‘ ணு பழகாம இருந்துட்டு இப்போமட்டும் எதுக்குடா நாம்மல நாமே கெடுத்துக்கனும்? “ என் கேள்வி செவிடன் காதில் ஊதிய சங்கானது.

பல இருமல்கள், புகைக்கண்ணீர் செலவழித்து ஒருவழியாக மிகவும் கஷ்டப்பட்டு ‘ தம்’ அடித்துக்கொண்டிருந்த மாறனை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. “ சே, ஒரு பொண்ணு பையனை என்னமா ஆட்டிவைக்கிறா !” என நினைத்து ஆச்சரியப்பட்டேன்.


சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்த சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.


- தபு சங்கர்



“ என்ன அழகா சடைப்பிண்ணியிருக்கா பாருடா !” எனக்கென்னமோ எலி வாலை நீளமாக தொங்கவிட்டதை போல் இருந்தது. மாறனிடம் கூறியதும் சில தர்ம அடிகள் வாங்கியதுதான் மிச்சம். அன்றிலிருந்து காஞ்சனாவைப்பற்றி மாறனிடம் comment அடிப்பதை மறந்தேன்.

Motorbike-ல் தான் wheeling செய்வார்கள். மாறனிடம் ஒரு Hero cycle இருந்தது. காஞ்சனாவிற்காக மாறன் சைக்கிளில் wheeling செய்தான்.சைக்கிளை பயங்கர வேகத்தில் ஓட்டி தன் வீரத்தை நிரூபித்தான். ஒரு சிக்ரெட் தீரத்தீர மரற்றொன்றை பற்றவைத்து சினிமா ஹீரோ போல் ஸ்டைல் செய்தான்.

டேய் நவீன் பாருடா இந்த காக்கா, காஞ்சனா காஞ்சனான்னு கத்துது’ எனக்கு ‘கா கா ‘ எனத்ட்தான் கேட்டது. எனினும் வாய் மூடி மௌனியாய் ஆமோதித்தேன்.

“ டேய் இன்னிக்கு காஞ்சனாகிட்டே பேசிட்டேன் ! “ உற்சாகமாக ஊளையிட்டுக்கொண்டே வந்தான் மாறன்.
‘ என்னடா பேசினா ? ‘
‘ மணி என்னனு கேட்டேண்டா . சொல்லிட்டா ! ‘
‘ அப்புறம் ? ‘
‘ அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியலே , வந்துட்டேன் ! ‘
உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தான். எனக்கு ‘ சப்பென்றாகிவிட்டது. மறுநாளில் இருந்து ஆர்ட்ஸ் காலேஜ் லீவ் விட்டுவிட்டார்கள். ஒருமாதமாக காஞ்சனாவைப் பார்க்க முடியவில்லை.மாறனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஜேம்ஸ் பாண்டாக மாறி துப்பறிந்து வேதனையாக வந்தான்.

“ என்னடா மாறா ! ஏன் இப்படி மூட் அவுட்டா இருக்கே? உன் ஆள் என்ன ஆனாள்? “

வழக்கமாக ‘ உன் ஆள் ‘ என்றதும் உற்சாகமாகிவிடும் மாறன் ‘ இல்லைடா ! கஞ்சனா கோர்ஸ் முடிந்து காலேஜையே விட்டு போய்ட்டாளாம்.இனிமே வரவேமாட்டாளாம் ! “

அடுத்து வந்த நாட்களில் மாறனுக்கு 3 இன்ச் தாடி வளர்ந்தது. சலூன் செலவு மிச்சமானது. தாடியை சிகெரெட் புகையால் நிறைத்தான்.

ஹோட்டலில் சாப்பிடும் போது மாறன் “ one Large whisky “ என்றான். அதிர்ச்சியுடன் மாறனைப் பார்த்தேன்.

‘ என்னடா இது புதுப்பழக்கம்?’
‘ முடியல நவின் என்னால முடியல ! தாங்கலடா ! சே! அவ போய்ட்டாடா! ‘
‘ அதுக்காகா ?! எதுக்குடா விஸ்கி ?’
‘ அவளை மறக்கத்தான் ! ‘

நானும் மாறனும் முதலில் சந்தித்தபொழுது பால் வடியும் முகத்துடன் இருந்தவனை ஒருகையில் சிகெரெட், மறுகையில் விஸ்கியுடன் பார்க்க எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ உன் பாட்டியின் நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘ என கத்துவதைப்
பார்த்ததும்
‘ அட... குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்றுமேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

- தபு சங்கர்

பின் வந்த நாட்களில் பல காகங்கள் மாறனால் பசியாறிக்கொண்டிருந்தன.

திங்கள், நவம்பர் 07, 2005

நினைவிருக்கிறதா?



நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டிற்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத மழை நாட்களை
உனக்கு நினைவிருக்கிறதா?

“ இந்த டிரஸ் போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னை பார்த்துவிடுகிறேன்” என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே
அந்த மாம்பழ நிற பட்டுப்பாவாடையை
நினைவிருக்கிறதா?

உனக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும்
அம்மா பார்க்கமுடியாது என்ற
தைரியத்தில் எதிரில் இருந்த
என்னை பார்த்து கண்சிமிட்டி
“ எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?

நாளிதழ் வந்ததும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
வாரபலன்கள் பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

ஒருமுறை உன் நிறத்திலேயே
சட்டை போட்டுவந்து
‘ பார்த்தாயா ‘ என்று
காலரை தூக்கிவிடபோது
பார்த்துவிட்ட அக்காவுக்காக
அடிக்கடி காலரை
தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?

துணி உலர்த்த
மாடிக்கு போகும்போதெல்லாம்
‘ ஏண்டி இப்படி ஊருக்கு
கேக்குற மாதிரி கத்தற ‘ என்று
உன் அம்மா திட்டுவார்களே
நினைவிருக்கிறதா?

நீ ‘ மணியக்கா வீட்டுக்கு
போகனும்’ என்றதும் நான்
கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல்
எடுத்துவந்த வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்டபோதெல்லாம்
‘ அவிய இருக்காக
இவிய பாக்ராக ‘ என்று
ஏதேனும் சொல்லித்தட்டிவிட்டு
முதன்முதலாக என்
கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு ஓடினாயே
நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின் காதில்விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?

என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என்று நீ
கேட்டதற்கு நான்
பதில் சொன்ன பிறகு
என்னைக் கடந்து செல்லும்பொழுதெல்லாம்
பாத்திரம், புத்தகம், கைகள்
என்று எதைக்கொண்டாவது
மறைத்துக்கொண்டாயே
நினைவிருக்கிறதா?

‘ நேத்து யெல்லாரும்
ஒறங்குன பொறவு
மச்சில யாரோ நடமாடுத
சத்தம் கேட்டுது ‘ என்று
அத்தை கூறியதை
ஒன்றுமே தெரியாதது போல்
கேட்டுக்கொண்டிருந்தோமே
நினைவிருக்கிறதா?

தொலைபேசியில் நான்
உனக்கு முத்தம்
தரும்போதெல்லாம் பதிலுக்கு
என்ன செய்வதென்று தெரியாமல்
‘ தேங்ஸ் ‘ என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?

நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை
என நினைத்து உன்
மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருகிறதா?

பின்குறிப்பு:-
இது நான் மிகவும் ரசித்த கவிதை.
கவிஞரின் பெயர் தெரியவில்லை

சனி, நவம்பர் 05, 2005

கூற்றமோ.. கண்ணோ..


குரல் கேட்பின்

குழைகிறது மனம்

பார்த்திருப்பினும்

பசித்திருக்கிறது கண்கள்

பேசினாலும் ஏசினாலும்

வாலாட்டியபடியே

அலையும் நாயாய்

மனம் ! ?

கொலுசினோசையோடு ....


உறங்கிவிட்டாயா ?

விழித்திருக்கிறாயா ?

ஆனாலும் என்

செவிக்குள் ஒலிக்கிறது

கொலுசு சத்தம் !

கிள்ளிப் பார்க்கிறேன்

உறங்கவில்லை நான் !

நிச்சயமாய் இது

எனக்கான அழைப்புதான் !

உறங்குங்கள்

நான் தேசம் போகிறேன்

கொலுசினோசையோடு ....

வியாழன், நவம்பர் 03, 2005

என்று தணியும் ?



காலையிலே பேசுகையில் கண்பார்த்து

கண்ணியனென்று பேரெடுத்துப்போகும்

இரவினிலே கனவினிலே

துகிலுரித்து கெக்கலிடும்

வழுக்கும் மனம் தினந்தோரும்

அடக்கத்தான் நினைக்கையிலே

ஆதவனும் வந்திடுவான்

வாய்கிழிய வாய்மை பேசும்

வன்முறையில் முலைமுறைகும்

முற்பகலில் முறுவலித்த

பெண்பற்றி நினைவலைகள்

நீந்தி நீந்தி உடல்முழுதும்

தனலாகவே மாறும்