திங்கள், ஜனவரி 30, 2006

நுங்கு தின்ன கதை



பேச்சி காதை :


ஐஸ்வண்டிகாரனிடம்
ஒருகுச்சி ஐஸ்வாங்கி
ரெண்டுபேரும் சுவச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன ?

நவாப்பழம் தின்னுபுட்டு
நாக்கு மேல நாக்கு வச்சு
கலர் பார்த்தகதையத்தான்
மறந்துட்டு தான்
போனதென்ன?

எளநுங்க தேடிப்போயி
பனங்காட்டு ஓடையிலே
நுங்குதின்ன சேதியதான்
மறந்துட்டு தான்
போனதென்ன?

கரும்பு காட்டுகுள்ள
கன்னிவக்க போலாமின்னு
நுனிக்கரும்ப ருசிச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன?

இடையத்தான் தொட்டுகிட்டு
சைக்கிள் ஓட்ட கத்துத்தந்தே
கீழே விழுகாம முழுகாம
ஆகிபுட்டேன் !


சீக்கிரமா நீ வந்தா
தாலிகட்டி கூட்டிடுபோ
இல்லையினா கோடித்துணி
வாங்கியாந்து தூக்கிட்டு போ !



அவன் காதை :


பிஸ்ஸாவ பார்த்தாலும்
பிசாசா உன் நெனப்பு
டின்பீரு குடிச்சாலும்
பொங்குது உன்
கதகதப்பு !


கவுனத்தான் போட்டுகிட்டு
பலபேரு போனாலும்
உன் கண்டாங்கி சேலை போல
இல்லயடி சின்ன சிறுக்கி !


பின்லேடன் போலநானும்
பதுங்கித்தான் போனாலும்
ஜார்ஜ்புஷ்ஷபோல
தொரத்துதடி உன் நெனப்பு !

சீமச்சரக்கடிக்க
பாருக்குதான் போனாலும்
நீ பாக்குறப்போ உள்ள ‘கிக்’கு
எதுலயுமே இல்லையடி !

ஜல்லிகட்டு காளைபோல
உன்நெனப்பு துள்ளுதடி
அடக்கத்தான் முடியாம
ஆஞ்சுபோயி நின்னுருக்கேன் !

பொங்கப் பானை போல
பொங்குதடி என் மனசு
சீத்த முள்ளுபோல
ஆகிபோச்சு என்படுக்கை !

சீவி முடிஞ்சுக்கோ
சீக்கிரமா நான் வாரேன்
கண்ணைத் தொடச்சுக்கோ
உன்னகொண்டு நான்போறேன் !

சனி, ஜனவரி 28, 2006

நட்பினால்...




இன்றும் நினைக்கிறேன்
என்றும் அவள்முகம்
எண்ணிப்பார்க்கையில்
மனதினில் நாணல்கள்

பலமுறை பார்க்கிறோம்
சிலமுறை முறைக்கிறாய்
திரும்பிப்பார்த்திட்டால்
யார் நீ என்கிறாய்?

நாட்கள் ஒடிட
நட்பாய் தொடங்கினோம்
நகரில் பல இடம்
சேர்ந்தே சுற்றினோம்

நட்புதான் என்றுநீ
சத்தியம் செய்கிறாய்
கடக்கும் பெண்ணினை
பார்த்தாலோ முறைக்கிறாய்

தொடங்கிடும் எல்லாமே
இப்படித்தான் என்றாலே
உடைப்போம் அதனையென
விடுதலை பேசினாய்

பேசும் பொழுதுகள்
வீசும் வார்த்தைகள்
நட்பெனும் வேலியை
தாண்டும் வெள்ளாடுகள்

வாய்கள் ஊமையாய்
ஆகும் பொழுதுகள்
கண்கள் தீர்க்குமே
வார்த்தையின் தேவைகள்

பார்த்தே கிடக்கும்
பொழுதுகள் வரமே
என்றே பொய்பேசி
கிடந்தோம் சுகமே

சின்னச் சண்டைகள்
தீரும் ஊடல்கள்
நெருங்கும் தருணங்கள்
பலதே தேடல்கள்

உண்மை அறிந்தும்
உணர மறுத்தோம்
என்ன உறவு ?
பின்னார் யோசிக்கலாம்

நாட்கள் ஓடிட
கொடுத்தாய் இதழில்
அழைப்பிதழ் என்று
உணரவே சிரித்தேன் !




புதன், ஜனவரி 25, 2006

காதலினால் ...



புகையாய் நீ
சாம்பலாய் நான்
நெருப்பாய் என்
காதல் !
அணைத்துவிடு
இல்லை
கரையவிடு !

கரையாய் நீ
அலையாய் நான்
ஈரமாய் என்
காதல் !
கொண்டுவிடு
இல்லை
மூழ்கவிடு !


பிடியாய் நீ
களிறாய் நான்
மதமாய் என்
காதல் !
அழைத்துவிடு
இல்லை
மடியவிடு !





செவ்வாய், ஜனவரி 10, 2006

18 – வயசுல ...



ஹேர்பின்னால் கூந்தலில்
பூக்குத்திக் கொள்கிறாய்
ஓரக்கண்ணால் என்னையும்
நீ குத்திக் கொல்கிறாய் !

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத் தெரியுமா ?
மகள்
புருவ அசைவிலேயே இதயத்தைப்
புடைத்து எடுப்பாள் என்று...

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மறிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!


உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

காக்கை ஒருநாள் உன்மேல்
எச்சமிட்டு விட்டது
சிலைகளைப் பார்த்தால் காகங்கள்
இப்படித்தான் செய்துவிடுகின்றன !

- கவிஞர் பா. விஜய் எழுதிய 18 வயசுல.. கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.

புதன், ஜனவரி 04, 2006

மைவிழியில்..




ஒரு குளிரான அதிகாலை கிறிஸ்மஸ் ஆராதனையில் தான் நான் அவளைப் பார்த்தேன். மார்கழியின் குளிரில் யேசுவின் பிறப்பைப்பற்றி சர்ச்சில் பாதிரியார் பிரசங்கம் செய்துகொண்டிருக்க அவளின் முதல் பார்வையில் நான் புதிதாக பிறந்துகொண்டிருந்தேன். இன்று நினைத்தாலும் அந்த அதிகாலைப் பனியை என்னுள் உணரமுடிகிறது. அன்று அவள் ஒரு மாம்பழ நிறத்தில் பாவாடையும் மாவிலை நிறத்தில் பட்டுசட்டையும் அணிந்திருந்தாள். இரட்டை சடையிட்டு முன்புறமாக விட்டிருந்தாள். சர்ச்சில் அன்று கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்தேன். அருகில் இருந்த நண்பனிடம் ஏதோ சொல்லி சிரித்தபொழுதுதான் கவனித்தேன். அவளும் அப்பொழுதுதான் என்னைப் பார்த்தாள். அதுவரை உணர்ந்திராத புதிய சிலிர்ப்பை என்னுள் உணர்ந்தேன்.

அப்பொழுது நான் +1 படித்துக்கொண்டிருந்தேன். அந்த வயதில் அவளின் பார்வை என்னுள் இனம்புரியாத மாற்றங்களை விளைவித்தது. இருநாட்களுக்குப் பிறகு என் வீட்டருகில் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் அவளைப் பார்த்தேன். நடந்து வருகிறாளா ? மிதந்து வருகிறாளா ? அப்படியொரு நடை. இவள் எங்கே இங்கே ? ஒருமுறைதான் என்னைப் பார்த்தாள். அவ்வளவுதான் 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் முடித்தமாதிரி என் இதயத்தில் படபடப்பு.

பின்வந்த நாட்களில் அவள் பெயர் ஜெசியென்றும் தன் பாட்டியின் வீட்டில் தங்கி படிக்க வந்திருக்கிறாள் என்றும் அறிந்துகொண்டேன். ஜெசி அப்பொழுது 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அதுவரை என் அம்மாவின் வற்புறுத்தலுக்காக எனோதானோவென சர்சுக்கு வந்துகொண்டிருந்த நான் பின்வந்த ஞாயிறுகளை தவறவிடவில்லை. ஜெசி அழகாக சிரித்தாள், அழகாக நடந்தாள்,அழகாக சினுங்கினாள் ஏனென்றால் அவள் என் காதலியாயிருந்தாள்.

அதன்ப்பின் எனக்கு அடிதடி சினிமாக்களே பிடிக்கவில்லை. ஜெசிக்கு இடையை விழுங்கும் கூந்தல், என்னை விழுங்கும் கண்கள்.

“ ஜெசி போனவாரம் நீ சர்ச்சுக்கு வரலைன்னு உள்ள நுழையரப்பவே கண்டு பிடிச்சிட்டேன் ! “
“ எப்படி ? “
“ சர்ச்சுல எல்லோரும் ‘எங்கே தேடுவேன் ‘ னு பாடிட்டு இருந்தாங்களே !!”
“ stupid ! அவங்க தேடுனது Jesus சை. என்னைய இல்லை !”


“ ஜெசி உன்னைய பார்த்து யாராவது இப்படி கேட்டுருக்காங்களா ? “
“ எப்படி ?“
“ ஏண்டி வாத்து மாதிரி நடக்கிறேன்னு !? “
“ டேய் ! கொன்னுருவேன் “

“ ஜெசி நேத்து என் வீட்டுக்கு வந்ததை சொல்லவேயில்லே? “
“ நானா ? உன் வீட்டுக்கா ? “
“ ஆமாம் ! என் தோட்டத்தில் ரோஜா பூத்திருந்துசே !!”
“ ச்சீய் போடா ! “


“ ஜெசி இப்படி அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்க்காதே ! “
“ ஏன் ? “
“ இந்த பொண்ணுக்கு ஒன்றறைக் கண்ணுண்ணு நெனச்சிக்கப்போறாங்க ! “
“ ம்ம் அப்போ என் முன்னாடிவந்து நில்லு ! “
“ சரி எனக்கொன்னுமில்லே ! அதுக்கப்புறம் முன் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை சரியா ? “
“ ம்ம் கைய ஒடச்சிடுவேன் ராஸ்கல்!! “


“ ஜெசி இனிமே முகம் சுழிக்கும்போது கொஞ்சம் முகத்தை மறைச்சுக்கோ !”
“ ஏன் ?“
“ முத்தம் கொடுத்துடுவனோன்னு பயமாயிருக்கு ! “
“ ம்ம் செய்வே. உதை படுவே !!”



“ ஜெசி உனக்கு ரொம்ப பெரிய மனசு ! “
“ ஏதோ அசிங்கமா சொல்ற மாதிரி தெரியுதே !! “
“ ஏண்டி இப்படி இருக்கே ! சர்ச்சுக்கு போற வழியில் இருக்கிற பிச்சைகாரனுக்கு 10 ரூபாய் கொடுத்தியே. அதைத்தான் சொன்னேன் ! “
“ பொழச்சு போ ! சமாளிச்சுட்டே !! “


இப்படியாக தினம் தினம் என் கனவுகளில் ஜெசியுடன் காதல் கொண்டேன் இடையில் சிறிது ஊடல் கொண்டேன். ஜெசி நேரில் வந்தால் அவள் பார்வையை மட்டும் பறித்துக்கொண்டேன். இப்படியாக எங்கள் கனவுகளில் மட்டும் காதல் கொண்டலைந்தோம்.எங்கள் உதடுகளின் வேலையையும் எங்களின் கண்களே கவனித்துக் கொண்டன. தினமும் ஜெசியை பார்க்காமல் என் பொழுதுகள் விடிவதில்லை. இதனிடையில் எனக்கு +2 தேர்வும் முடிந்தது. கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் செல்ல வேண்டியதாயிற்று.
எப்பொழுது செமஸ்டர் முடியும் என என் ஜெசியை பார்க்க ஊருக்கு ஓடிவந்தேன். இப்பொழுதாவது என் ஜெசியுடன் பேசிவிடவேண்டும். என்னை தயார்படுத்திக்கொண்டேன். சர்ச்சில் மணியடிக்கும் சத்தம். அழைத்துவிட்டார்கள்.
“ பாவிகளே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் “ சர்ச்சின் முன் இருக்கும் வாசகம் எனக்கு “ காதலர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் “ எனத் தெரிந்தது. ஜெசி என்னை எப்படி பார்ப்பாள்? முதன் முதலில் அவளிடம் பேசப்போகிறேன். என்ன சொல்வாள் ?

“ ஏண்டா ராஸ்கல் என்னைய விட்டுட்டு எங்கே போய்ட்டே ?

“நல்ல வேளை இப்போவாச்சும் வந்து பேசினேயே ! நீ ஊமையோன்னு நெனச்சிட்டேன் ! “
“ ஏண்டா இவ்ளோ சீக்கிரம் வந்து பேசினே? இன்னும் ஒரு 30 வருசம் கழிச்சு பேசியிருக்க வேண்டியதுதானே ? “

பலவாறு கற்பனைகளில் மிதந்துகொண்டே சர்ச்சுக்குள் நுழைந்தேன். பாதிரியார் “ தேவப்ரசன்னம் “ பற்றி பேசிக்கொண்டிருந்தார்.நான் என் ஜெசியின் ப்ரசன்னம் எங்காவது தென்படுகிறதா என தேடிக்கொண்டிருந்தேன். இல்லை. ஒருவேளை உடம்புக்கு முடியலையா? யாரிடம் கேட்பது? சரி எப்படியும் நாளை என் வீட்டைக்கடந்துதானே பள்ளி செல்லவேண்டும். ஆறுதல் படுத்திக்கொண்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன்.

மதியம் சாப்பிடும்பொழுது என் அம்மா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “ ஏங்க இந்த மரகதம் டீச்சர் பேத்தி இங்க தங்கி படிச்சிட்டு இருந்தாள்ல ? அவளை 10 வரை படிச்சது போதும்னு அவ அப்பா கூட்டிடு போய்ட்டாராம். இன்னும் ரெண்டு மாசத்திலே அவளுக்கு கல்யாணம்னு டீச்சர் சொல்றாங்க ! “

“ யாரு ? எந்த பொண்ணு ? எனக்கு தெரியலயே !? “

“ என்னங்க நீங்க அந்த பொண்ணோட பேரு கூட ஜெசின்னு ! “

என் அம்மா சொல்லிக்கொண்டே போக எனக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
“ ஐய்யய்யோ ! ஏண்டா பாதி சாப்பாட்டுல எந்திருச்சு போறே ? “ என் அம்மா கேட்பது தூரத்தில் கேட்டது.

உந்தன் கிள்ளை மொழியினிலே
மனம் கொள்ளையடித்ததும் ஏன் ?
துள்ளித்துள்ளி வரும் நடையில்
மனம் மெல்லத்துடித்ததும் ஏன்?
உன்னை காண வேண்டும்
கூடவேண்டும்
வாராயோ ? வாராயோ ?