புதன், ஜனவரி 21, 2009

உன்னிடம் மயங்குகிறேன்...


உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...



எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..



நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....



எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...



நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?



அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..



நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...



"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...