வெள்ளி, நவம்பர் 11, 2005

கள்ளினும் காதல் இனிது


வருடம் 1994. ஒரு அழகான மழை விட்ட தினம்.

கடிகாரம் 12 முறை அடித்தது. நான் அறையில் டிராயிங் போட்டுக்கொண்டிருந்தேன்.மாறன் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான்.

“ டேய் நவீன் வாடா ! மணியாச்சு காலேஜ் விட்டுடுவாங்க “ மாறன் என்னை கிளம்ப சொல்லி அவசரபடுத்தினான்.

“ இருடா கொஞ்சம்தான் இருக்கு. முடிச்சுட்டு வந்திடறேன்” என்ற என்னிடம்
“ இப்போ நீ வரலைன்னா நான் போறேன்” என கோபித்துகொண்டு கிளம்பியவனை
“ இரு வர்றேன் “ என எடுத்து வைத்துவிட்டு கிளம்பினேன்.

மாறன் எனது நெருங்கிய நண்பன்.ஓரே அறையில் வசித்துவந்தோம்.எங்கள் அறை ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்க்கு எதிரில் உள்ள தெருவில் இருந்தது. நாங்கள் அந்த ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். ஆர்ட்ஸ் காலேஜ் விடும் நேரம் நானும் மாறனும் அருகில் இருக்கும் டீ கடையில் டீ குடித்துக்கொண்டே காலேஜிலிருந்து வரும் பெண்கலை ‘ சைட் ‘ அடித்துக்கொண்டிருப்போம்.பஸ் ஸ்டாப் வேறு டீ கடை அருகில் இருந்ததால் பார்வைகளும் கமெண்ட்களும் விட்டுக்கொண்டிருப்போம்.எங்களால் தினமும் 10 – 15 டீ போணியாவதால் டீகடைகாரரும் எங்கள் தோஸ்த் ஆகிவிட்டார்.

“ டேய் நவீன் பாருடா அந்த பிங்க் சுரிதார். சூப்பரா இருக்காள்ல? “

“ சூப்பர்னு சொல்லமுடியாது.பரவாயில்ல ! “ என்றேன் நான்.

“ போடா ! ரசனை கெட்டவனே! சே! இந்த மாதிரி அழகான பொண்ணை இந்த காலேஜ்ல பார்த்ததே கெடையாதுடா” மாறன் உணர்ச்சிவசப்பட்டு கூறிக்கொண்டிருந்தான்.

ஓருசில நாட்களில் மாறன் பல வேலைகள் செய்து அந்த பெண்ணின் பெயர் ‘காஞ்சனா’ என தெரிந்துகொண்டான்.
“டேய் நவின் காஞ்சனாவை பார்த்தாலே ஒரு மாதிரி ஆயிடுதுடா ! என்னடா பண்றது?” மாறனின் முகத்தில் காதல் வேதனை தெரிந்தது.

“ ஏண்டா மாறா ! சைட் அடிச்சமா வந்தமான்னு இல்லாம என்ன காதலா காஞ்சனா மேல?” என்று கேட்ட என்னை பார்த்து வழிந்துகொண்டே ஆமோதித்தான்.

“ நவின் நான் எப்படியாச்சும் கஞ்சனாகிட்டே பேசப்போறேண்டா. அதுக்குத்தான் என்ன வழின்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்”

பஸ் ஸ்டாப் அருகிலேயே ஒரு போஸ்ட் பாக்ஸ் இருந்தது.வீட்டிற்கு கடிதம் எழுதுவது என்றாலே வேப்பெண்ணை குடித்தது போலாகிவிடும் மாறன் தினமும் ஒரு லெட்டர் வீட்டிற்கு, நண்பர்களுக்கு க்ரீட்டிங்ஸ் என காஞ்சனா பார்வையில் படும்படி போஸ்ட் பாக்ஸில் போஸ்ட் செய்தான்.காஞ்சனாவிற்கு கேட்கும்படி என்னிடம் கத்தி கத்தி பேசினான்.ஆனால் காஞ்சனாவின் கவனத்தை ஈர்த்தமாதிரி தெரியவில்லை.
ஒருநாள் மாறன் பஸ் ஸ்டாபில் போட்ட பெரிய தும்மலுக்கு எதேச்சையாக மாறன் இருந்த திசையில் திரும்பிப்பார்த்துவிட்டாள்.
“ டேய் என்னை பார்க்கிறாடா !! “ மாறனின் கூச்சல் பெரிதாயிருந்தது. அன்று முழுதும் ‘ கள் குடித்த’ குரங்கானான். “ நவீன் இன்னிக்கு உனக்கு ட்ரீட் வாடா! “ என்றவனைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

பின் வந்த நாட்களில் எனக்கு பல டீக்களும் , ஜூஸ்களும் மாறனால் sponsor செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் ‘ காஞ்சனா என்னை ஓரக்கண்ணால்
பார்த்தாள் ‘ என்றோ அல்லது ‘ டேய் நான் அன்னிக்கு தும்மின மாதிரியே அவளும் தும்மினாடா ‘ என்றோ புலம்பிக்கொண்டிருப்பான்.

“ நவின் சும்ம டீகுடிச்சுட்டு இருந்தாலாம் அவ கவனிக்கமாட்டாடா, ‘தம்’ அடிக்கலாம்னு இருக்கேன் “ மாறன் declare செய்தான்.

“ வேண்டாம்டா மாறா, இத்த்னை நாளும் ‘ தம், தண்ணி ‘ ணு பழகாம இருந்துட்டு இப்போமட்டும் எதுக்குடா நாம்மல நாமே கெடுத்துக்கனும்? “ என் கேள்வி செவிடன் காதில் ஊதிய சங்கானது.

பல இருமல்கள், புகைக்கண்ணீர் செலவழித்து ஒருவழியாக மிகவும் கஷ்டப்பட்டு ‘ தம்’ அடித்துக்கொண்டிருந்த மாறனை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. “ சே, ஒரு பொண்ணு பையனை என்னமா ஆட்டிவைக்கிறா !” என நினைத்து ஆச்சரியப்பட்டேன்.


சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்த சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.


- தபு சங்கர்“ என்ன அழகா சடைப்பிண்ணியிருக்கா பாருடா !” எனக்கென்னமோ எலி வாலை நீளமாக தொங்கவிட்டதை போல் இருந்தது. மாறனிடம் கூறியதும் சில தர்ம அடிகள் வாங்கியதுதான் மிச்சம். அன்றிலிருந்து காஞ்சனாவைப்பற்றி மாறனிடம் comment அடிப்பதை மறந்தேன்.

Motorbike-ல் தான் wheeling செய்வார்கள். மாறனிடம் ஒரு Hero cycle இருந்தது. காஞ்சனாவிற்காக மாறன் சைக்கிளில் wheeling செய்தான்.சைக்கிளை பயங்கர வேகத்தில் ஓட்டி தன் வீரத்தை நிரூபித்தான். ஒரு சிக்ரெட் தீரத்தீர மரற்றொன்றை பற்றவைத்து சினிமா ஹீரோ போல் ஸ்டைல் செய்தான்.

டேய் நவீன் பாருடா இந்த காக்கா, காஞ்சனா காஞ்சனான்னு கத்துது’ எனக்கு ‘கா கா ‘ எனத்ட்தான் கேட்டது. எனினும் வாய் மூடி மௌனியாய் ஆமோதித்தேன்.

“ டேய் இன்னிக்கு காஞ்சனாகிட்டே பேசிட்டேன் ! “ உற்சாகமாக ஊளையிட்டுக்கொண்டே வந்தான் மாறன்.
‘ என்னடா பேசினா ? ‘
‘ மணி என்னனு கேட்டேண்டா . சொல்லிட்டா ! ‘
‘ அப்புறம் ? ‘
‘ அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியலே , வந்துட்டேன் ! ‘
உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தான். எனக்கு ‘ சப்பென்றாகிவிட்டது. மறுநாளில் இருந்து ஆர்ட்ஸ் காலேஜ் லீவ் விட்டுவிட்டார்கள். ஒருமாதமாக காஞ்சனாவைப் பார்க்க முடியவில்லை.மாறனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஜேம்ஸ் பாண்டாக மாறி துப்பறிந்து வேதனையாக வந்தான்.

“ என்னடா மாறா ! ஏன் இப்படி மூட் அவுட்டா இருக்கே? உன் ஆள் என்ன ஆனாள்? “

வழக்கமாக ‘ உன் ஆள் ‘ என்றதும் உற்சாகமாகிவிடும் மாறன் ‘ இல்லைடா ! கஞ்சனா கோர்ஸ் முடிந்து காலேஜையே விட்டு போய்ட்டாளாம்.இனிமே வரவேமாட்டாளாம் ! “

அடுத்து வந்த நாட்களில் மாறனுக்கு 3 இன்ச் தாடி வளர்ந்தது. சலூன் செலவு மிச்சமானது. தாடியை சிகெரெட் புகையால் நிறைத்தான்.

ஹோட்டலில் சாப்பிடும் போது மாறன் “ one Large whisky “ என்றான். அதிர்ச்சியுடன் மாறனைப் பார்த்தேன்.

‘ என்னடா இது புதுப்பழக்கம்?’
‘ முடியல நவின் என்னால முடியல ! தாங்கலடா ! சே! அவ போய்ட்டாடா! ‘
‘ அதுக்காகா ?! எதுக்குடா விஸ்கி ?’
‘ அவளை மறக்கத்தான் ! ‘

நானும் மாறனும் முதலில் சந்தித்தபொழுது பால் வடியும் முகத்துடன் இருந்தவனை ஒருகையில் சிகெரெட், மறுகையில் விஸ்கியுடன் பார்க்க எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ உன் பாட்டியின் நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘ என கத்துவதைப்
பார்த்ததும்
‘ அட... குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்றுமேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

- தபு சங்கர்

பின் வந்த நாட்களில் பல காகங்கள் மாறனால் பசியாறிக்கொண்டிருந்தன.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

A Great Work!

அன்பு சொன்னது…

வருடம் 1994. ஒரு அழகான மழை விட்ட தினம்.

கடிகாரம் 12 முறை அடித்தது. நான் அறையில் டிராயிங் போட்டுக்கொண்டிருந்தேன்.மாறன் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான்.


தொடக்கமே கலக்கல்... உங்களுக்கு எழுத்து நல்லா வருது (அல்லது உங்களுடைய வாசிப்பு கைகொடுக்கிறது).

ஆங்காங்கே தாளிச்ச கருவேப்பிலை மாதிரி நீங்க ஒவ்வொரு பதிவிலும் தூவிவிடும் தபுசங்கர் கவிதைகளும், இனிமையான படங்களும் அருமை.

ஒவ்வொரு பதிவும் மனதொன்றி வாசிக்க முடிகிறது. சிறப்பாக தொடருங்கள். மிக்க நன்றி.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

அன்பு,
உங்களது பின்னூட்டம் எனக்கு புத்துயிர் அளிக்கிறது.நன்றி

சத்தியா சொன்னது…

ஓர் அழகான காதல் கதை.
நன்றாக உள்ளது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஓர் அழகான காதல் கதை.
நன்றாக உள்ளது. //

மிக்க நன்றி சத்தியா. உங்களின் பராட்டுக்கள் என் காம்ப்ளான் :))

Unknown சொன்னது…

Pooda Venkayam


Mapppilai

பெயரில்லா சொன்னது…

\\‘ இல்லைடா ! கஞ்சனா கோர்ஸ் முடிந்து காலேஜையே விட்டு போய்ட்டாளாம்.இனிமே வரவேமாட்டாளாம் ! “\\

'கல்லூரி காதல் கல்லூரி வரை'......அதிலும் இது ஒருதலை காதல்!!!


\\“ நவின் சும்ம டீகுடிச்சுட்டு இருந்தாலாம் அவ கவனிக்கமாட்டாடா, ‘தம்’ அடிக்கலாம்னு இருக்கேன் “ மாறன் declare செய்தான்.\

தம் அடிக்கிறதுக்கு இப்படி ஒரு காரணமா? இதென்ன புது கதையா இருக்கு, அந்த பொண்ணு கவனிக்கனும்னு தம் அடிக்க பழகுவாராம்,
அப்புறம் அவ விட்டுட்டு போய்ட்டான்னு 'விஸ்கி' குடிப்பாராம்,
எல்லா கெட்ட பழக்கமும் பழகிட்டு அதுக்கு , பொண்ணு மேல பழி போட்டா எப்படி??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//riaz said...
Pooda Venkayam


Mapppilai//

வாடா மாப்ளே :)))
அட என்னா ஒரு தத்துவம்? உரிக்க உரிக்க வெங்காயமும் காதலும் ஒண்ணுதான்னு எப்படிடா பட்டுன்னு சொல்லிட்டே :))))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\‘ இல்லைடா ! கஞ்சனா கோர்ஸ் முடிந்து காலேஜையே விட்டு போய்ட்டாளாம்.இனிமே வரவேமாட்டாளாம் ! “\\

'கல்லூரி காதல் கல்லூரி வரை'......அதிலும் இது ஒருதலை காதல்!!!//

வாங்க அனானி :))
அட என்னங்க சொல்ல வருகிறீர்கள் ? :))


\\“ நவின் சும்ம டீகுடிச்சுட்டு இருந்தாலாம் அவ கவனிக்கமாட்டாடா, ‘தம்’ அடிக்கலாம்னு இருக்கேன் “ மாறன் declare செய்தான்.\

//தம் அடிக்கிறதுக்கு இப்படி ஒரு காரணமா? இதென்ன புது கதையா இருக்கு, அந்த பொண்ணு கவனிக்கனும்னு தம் அடிக்க பழகுவாராம்,
அப்புறம் அவ விட்டுட்டு போய்ட்டான்னு 'விஸ்கி' குடிப்பாராம்,
எல்லா கெட்ட பழக்கமும் பழகிட்டு அதுக்கு , பொண்ணு மேல பழி போட்டா எப்படி?? //

என்ன இப்படி சொல்லிட்டீங்க?? :))) ஆஹா பழிபோடெல்லாம் இல்லீங்க. ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவுதான் :)))