செவ்வாய், மார்ச் 21, 2006

மீண்டும் ஒரு காதல் கவிதைஅது ஒரு கோடை விடுமுறை
நான் எனது பாட்டியின்
வீட்டில்

ஊரே நிறைந்திருக்கிறது
வீதியெங்கும் உயிருள்ள
மஞ்சள் மலர்களாய்
அலைந்து திரியும்
கோழிக்குஞ்சுகள்

கூட்டமேயில்லாத ஆடுகள்
மேயும் வீதிகள்
ரசித்துக் கொண்டே
நடக்கையில்
கிணற்று முற்றம்

அழகான தாவணியில்
அழகுகள் ததும்ப நீ
ததும்பாமல் நிறைவாய்
நீ சுமந்து வரும்
குடம்

கிணற்று நீர் போல்
கருமையான விழிகள்
அம்பு தைத்தாற்போல
கூர்நாசியில் மூக்குத்தி
இதழோரங்களில் லேசாக
வழிந்து கொண்டிருக்கும்
சிறு புன்னகை

“என்ன மாப்ளே
அப்படி பாக்கறவுக ?”
குரலினால் கலைந்தேன்
நீர் சேந்திக்கொண்டிருக்கும்
சித்தி ! தொடர்ந்தார்
“ம்ம் நடத்தும் ! “
நாணமானேன்
நீ சிரித்துக் கொண்டே
அவசரமாய் மறைகிறாய்
மாலை ஆதவனைப்போல்
வீதிகள் இருண்டன
எனக்கு மட்டும்


இப்படித்தான் ஆரம்பித்தது
பரிமாறிக்கொண்டோம்
பார்வைகளையும்
புத்தகங்களையும்
நீ சுட்ட பணியாரங்களையும்
சில நேரங்களில்
நம் ஸ்பரிசங்களையும்
ஒவ்வொரு முறையும்
நம் இதயங்களையும்

அருகம்புல்லைப் போல்
தானாகவே வளர்ந்திருந்தது
எனக்குள்ளும் உனக்குள்ளும்
நமக்குள்ளான நேசம்
மையலான மதியத்தில்
சோளக்காட்டுக்கிடையில்
நடந்த கண்ணாம்பூச்சி
விளையாட்டைக் கண்ட
சோளக்குருவிகள்
கண்மூடிக் கொண்டன

வெப்பமாக சூரியனும்
அதனினும் வெப்பமாக
நம் மூச்சுக்காற்றுகளும்
தேடிவிழையும்
கரங்களும்
கலைந்த தாவணியும்
கலையாத நினைவுகளுமாய்
இன்றும் என் மதியங்கள்

விடைபெற்றது
என் விடுமுறையும் தான்
மீண்டும் வருவேன்
மீட்டுச்சென்று
மீட்டுவேன்
உறுதி கூறினேன்
என் மார்பெல்லாம்
உன் கண்ணீர்
கனத்துப்போனது
நினைவுதாங்கியான என்
மனதும்தான்

சில மாதங்களில்
ஏதோ ஒரு விடுமுறை
உன்னைப்பார்க்க வேண்டும்
ஆவலில் வருகிறேன்
ஊரெல்லாம் தோரணம்
நான் வருவதை அறிந்து
விட்டாயா என்ன?
புன்னகையுடன் நடக்கிறேன்
எதிரில் ஊர்வலம் வருகிறது
ஓரமாய் ஒதுங்கி நிற்கிறேன்
அருகில் வரும்போதுதான்
பார்க்கிறேன்
மணக்கோலத்தில் நீ !

சனி, மார்ச் 11, 2006

மச்சக்குறிஅம்மாகூட
நடந்து வந்தா
கண்ணாலயே
திங்குற
தன்னந்தன்னியா
தனிச்சு வந்தா
தோப்போரமா
பதுங்கற

மச்சுல மேல
நின்னுகிட்டு
மொறைச்சு மொறைச்சு
பாக்குற
நான் பார்த்தா
மட்டும்
குழந்தைய போல
சிரிச்சு சிரிச்சு
மயக்குறே

யாரும் இல்லா
சமயதுல
பதுங்கி பதுங்கி
ஒதுங்குறே
அக்கம்பக்கம்
அரவம் கேட்டா
அய்யய்யோன்னு
ஓடுறே

பக்கம் வந்து
நானும் நின்னா
கொஞ்சி கொஞ்சி
பேசுறே
நானும் சேர்ந்து
சிரிச்சுப்புட்டா
கொஞ்சம் மிஞ்சப்
பாக்குற


மச்சக் குறி
சொல்லறேன்னு
மிச்சம் காட்ட
துண்டுறே
எச்சம் சொச்சம்
வைக்கலாம்னா
கழுத்தைக் கட்டித்
கெஞ்சுறே !

பழமா காயா
சொல்லறேன்னு
தொட்டுத் தொட்டு
மயக்குறே
பக்கம் வந்து
கிட்டநின்னு
பூனையாட்டம்
சிணுங்கறே

ஏடாகூடம்
ஆகிடும்னு
சொன்னா
மூக்கை விடச்சு
மொறைக்கறே
கண்ணால் என்னை
கன்னம் வச்சு
தப்புப்பண்ண
தூண்டுற

சும்மா சும்மா
பசப்பாம என்
கழுத்தில் தாலி
கட்டுடா
அப்புறம் பாரு
சேதி தெரியும்
நீ கெஞ்ச கெஞ்ச
கொஞ்சுவேன்

வெள்ளி, மார்ச் 10, 2006

இணைய சங்கிலியில் - எனதும்நானும் சங்கிலியில்
இணைய அழைத்த கிளி
நித்தியா என்றொரு கவி
சொல்ல ஏதுமில்லைதான்
இருந்தும் பதிகிறேன்
மலையுச்சியின் கோவிலில்
பெயர் பதியும் ஒரு
மாணவனைப் போல ...வாழ்ந்த 4 இடம்

புதுக்கோட்டை
குளித்தலை
திருச்சி
தும்க்கூர்

விடுமுறைக்குச் சென்ற 4 இடம்

பெங்களூர்
ஊட்டி
கொடைக்கானல்
கோவா

இப்பொழுது பார்த்தாலும் சலிக்காத 4 படம்

மொளனராகம்
பன்னீர்ப்புஷ்பங்கள்
இன்று போய் நாளை வா
பாலுமேந்திராவின் படைப்புகள் அனைத்தும்

பிடித்த 4 உணவு

தயிர் சாதம்
வறுத்த மீன்
அம்மா செய்யும் மட்டன்பிரியாணி
மிளகுகறி

தினமும் பார்க்கும் 4 இணையம்

ஜிமெயில்
தேன்கூடு
யாஹூ
தமிழ் மணம்

அனைவரையும் அழைக்க விருப்பம்தான் ! ஆனால் கோவில் சுவர்களில் ஏற்கனவே பதியப்பட்ட பல பெயர்கள்.


இடையில் எனதும்...

புதன், மார்ச் 01, 2006

மலராத பொழுதுசில மாதங்கள்
நினைவுபடுத்துகின்றன
குளிர்தழுவும்
மார்கழியைப் போல்
என்னைத்தழுவி நிற்கும்
உன் நினைவுகள்

கோலத்தில் இட்ட
பூசணிப் பூப்போல
அதிகாலையிலேயே
நீயும்
கோலங்களுக்கிடையே
மற்றுமொரு
கோலமாக
பூத்து நிற்கிறாய்

பூக்களுக்கெல்லாம்
வேர்த்திருக்கின்றது
படிந்திருக்கும்
அதிகாலைப் பனி
கோலமிட்டுக்
களைத்திருக்கும் உன்
நெற்றியைப் போல

மெதுவாக விலகுகிறது
நீ வந்துவிட்டதைக்
கண்ட இருள்
ஆதவனைக் கண்டால்
வேறு என்ன செய்யும் ?
இருந்தும் உன்னைத்
தழுவிக்கிடக்கிறது
இருள்
பிறிய மனமில்லாமல்
கிடக்கும்
ஒரு காதலனைப் போல

இன்றும் மார்கழி
வருகிறது
கோலங்களுக்கிடையே
பூமலர்கிறது
பூக்களுக்கிடையே
தேடுகிறேன்
இருந்தும் என்ன
நீ மலர்ந்திராத கோலங்கள்
என்முன்
பனியில்லாத
மார்கழியாய்...