புதன், செப்டம்பர் 10, 2008

ச்ச்சீய்ய்... போடா....


உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா...



எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??



ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ...



என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்...



தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..


உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?



நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...




யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?


கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!


உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...


உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?




இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?