Monday, April 06, 2009

இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?


என்னதான் நீயாகக் கொடுத்தாலும்
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...



நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில்
தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நேரத்தை என்ன செய்யலாம்..?
அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து
அணைத்து விடட்டுமா
உன்னைப் போலவே..?




இவ்வளவு இறுக்கமான
அணைக்காதேடா எனக்கு
மூச்சுத்திணறுகிறது எனக்
கொஞ்சலாகச் சொல்கிறாய்...
உனக்காவது பரவாயில்லை
உன் கொஞ்சல் கேட்டாலே
எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி
குட்டிபிசாசே...



சரியான திருடண்டா நீ
என சொல்கிறாய்
அடிபாவி... உன்னிடம்
திருடிய முத்தங்களை
உன்னிடம் தானே
கொடுக்கிறேன்..
இதற்கே இப்படி திருட்டுப்பட்டம்
கட்டினால் அப்புறம்
கொள்ளைக்காரனாகிவிடுவேன்
ஜாக்கிரதை...



இரவுகள் எல்லாம் தீர்ந்த
பின்னும் பேசிக்கொள்ள
நமக்கு என்னெல்லாமோ
இருக்கின்றன...
ஆனாலும் சலிப்பதேயில்லை
நிறுத்தவும் மனதேயில்லை
உன் கொஞ்சலான
முத்தங்களைப்போல...



காலமெல்லாம் காதலோடு
இருந்துவிடலாம் என்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
உன்னை சந்திக்கும் வரை...



எப்பொழுதும் உன் அணைப்புக்குள்
இருக்கவேண்டும் என்ற
பேராசையெல்லாம்
எனக்குக் கிடையாது...
உன் கழுத்துச் சங்கிலியின்
மையமாக என்னைத்
தூக்கிலிட்டாலே போதும்...

பிழைத்துக் கொள்வேன்...


இந்தத் துப்பட்டாவுக்கு வந்த
வாழ்க்கையைப் பாரேன்...
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
எனக்குப் பழிப்பு காட்டுகின்றது..
சொல்லி வை...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
நான் சும்மா இருக்கமாட்டேனடி...



அச்சசோ இந்த சுரிதார்
கொஞ்சம் சின்னதாகிடுச்சுடா
என அழகான முகம் சுழித்துச்
சொல்கிறாய்...
இப்படி இருமுனைத் தாக்குதல்
நடத்தினால் என்ன
சொல்வது நான்...
திருட்டுச் சுரிதார்
இவ்வளவு நாளும்
உன்னை
எப்படியெல்லாம்
மறைத்திருக்கிறது பாரேன்...



கல்யாணதுக்கு அப்புறமும்
என்னை இதே மாதிரி
காதலிப்பாயாடா என
நீ கேட்டாயல்லவா...?
கண்டிப்பாக இதே மாதிரி
காதலிக்க மாட்டேண்டி..
வேற மாதிரி தான் காதலிப்பேன்
என கண்சிமிட்டிக்கொண்டே
சொன்னபோது மீண்டும் உன்
வெட்கம் திருடிய இன்பம்
அடைந்தேன்...



Wednesday, January 21, 2009

உன்னிடம் மயங்குகிறேன்...


உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...



எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..



நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....



எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...



நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?



அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..



நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...



"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...



Monday, December 29, 2008

தடம் எண் 143ல் கொஞ்சல் Express...


இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??
இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?

பின்குறிப்பு :‍‍‍‍

தோழி காயத்ரியின் கவிதைக் கருவிற்காக நான் முயற்சி செய்தது...

காயத்ரியின் இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!

இதே கவிதைக்கருவிற்கு கவிஞர் ஸ்ரீ எழுதிய ர‌(ம)யில் காதலன்


Monday, November 10, 2008

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...


கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..



இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?



Wednesday, September 10, 2008

ச்ச்சீய்ய்... போடா....


உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா...



எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??



ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் ...
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ...



என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்...



தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..


உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?



நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...




யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?


கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!


உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...


உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?




இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?