
நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டிற்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத மழை நாட்களை
உனக்கு நினைவிருக்கிறதா?
“ இந்த டிரஸ் போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னை பார்த்துவிடுகிறேன்” என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே
அந்த மாம்பழ நிற பட்டுப்பாவாடையை
நினைவிருக்கிறதா?
உனக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும்
அம்மா பார்க்கமுடியாது என்ற
தைரியத்தில் எதிரில் இருந்த
என்னை பார்த்து கண்சிமிட்டி
“ எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?
நாளிதழ் வந்ததும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
வாரபலன்கள் பார்ப்போமே
நினைவிருக்கிறதா?
ஒருமுறை உன் நிறத்திலேயே
சட்டை போட்டுவந்து
‘ பார்த்தாயா ‘ என்று
காலரை தூக்கிவிடபோது
பார்த்துவிட்ட அக்காவுக்காக
அடிக்கடி காலரை
தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?
துணி உலர்த்த
மாடிக்கு போகும்போதெல்லாம்
‘ ஏண்டி இப்படி ஊருக்கு
கேக்குற மாதிரி கத்தற ‘ என்று
உன் அம்மா திட்டுவார்களே
நினைவிருக்கிறதா?
நீ ‘ மணியக்கா வீட்டுக்கு
போகனும்’ என்றதும் நான்
கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல்
எடுத்துவந்த வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?
முத்தம் கேட்டபோதெல்லாம்
‘ அவிய இருக்காக
இவிய பாக்ராக ‘ என்று
ஏதேனும் சொல்லித்தட்டிவிட்டு
முதன்முதலாக என்
கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு ஓடினாயே
நினைவிருக்கிறதா?
மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின் காதில்விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?
என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என்று நீ
கேட்டதற்கு நான்
பதில் சொன்ன பிறகு
என்னைக் கடந்து செல்லும்பொழுதெல்லாம்
பாத்திரம், புத்தகம், கைகள்
என்று எதைக்கொண்டாவது
மறைத்துக்கொண்டாயே
நினைவிருக்கிறதா?
‘ நேத்து யெல்லாரும்
ஒறங்குன பொறவு
மச்சில யாரோ நடமாடுத
சத்தம் கேட்டுது ‘ என்று
அத்தை கூறியதை
ஒன்றுமே தெரியாதது போல்
கேட்டுக்கொண்டிருந்தோமே
நினைவிருக்கிறதா?
தொலைபேசியில் நான்
உனக்கு முத்தம்
தரும்போதெல்லாம் பதிலுக்கு
என்ன செய்வதென்று தெரியாமல்
‘ தேங்ஸ் ‘ என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?
நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை
என நினைத்து உன்
மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருகிறதா?
பின்குறிப்பு:-
இது நான் மிகவும் ரசித்த கவிதை.
கவிஞரின் பெயர் தெரியவில்லை
6 கருத்துகள்:
That was too good..
அருமை.
வருணிக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுக் கவிதை.
nice kavithai
வாங்க அன்பு,
நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)
Hi I saw this poems in ananda vikatan long time ago.i think its from a tamil Cinematography. i dont remember his name.
its not from thabu shankar right??
வாருங்கள் சுகன்யா...:))
ஆம் இந்தப்பதிவு பதிக்கும் போது எனக்கு அவரைத்தெரியாது...
இந்தக் கவிதையை எழுதியவர் பிரபல கேமராமேன் விஜய்மில்டன்...
அவரின் " கொலுசுகள் பேசக்கூடும் " கவிதை தொகுப்பிலிருக்கின்றன இக்கவிதைகள்... :)))
மிக்க நன்றி...
கருத்துரையிடுக