
அது ஒரு கோடை விடுமுறை
நான் எனது பாட்டியின்
வீட்டில்
ஊரே நிறைந்திருக்கிறது
வீதியெங்கும் உயிருள்ள
மஞ்சள் மலர்களாய்
அலைந்து திரியும்
கோழிக்குஞ்சுகள்
கூட்டமேயில்லாத ஆடுகள்
மேயும் வீதிகள்
ரசித்துக் கொண்டே
நடக்கையில்
கிணற்று முற்றம்
அழகான தாவணியில்
அழகுகள் ததும்ப நீ
ததும்பாமல் நிறைவாய்
நீ சுமந்து வரும்
குடம்
கிணற்று நீர் போல்
கருமையான விழிகள்
அம்பு தைத்தாற்போல
கூர்நாசியில் மூக்குத்தி
இதழோரங்களில் லேசாக
வழிந்து கொண்டிருக்கும்
சிறு புன்னகை
“என்ன மாப்ளே
அப்படி பாக்கறவுக ?”
குரலினால் கலைந்தேன்
நீர் சேந்திக்கொண்டிருக்கும்
சித்தி ! தொடர்ந்தார்
“ம்ம் நடத்தும் ! “
நாணமானேன்
நீ சிரித்துக் கொண்டே
அவசரமாய் மறைகிறாய்
மாலை ஆதவனைப்போல்
வீதிகள் இருண்டன
எனக்கு மட்டும்
இப்படித்தான் ஆரம்பித்தது
பரிமாறிக்கொண்டோம்
பார்வைகளையும்
புத்தகங்களையும்
நீ சுட்ட பணியாரங்களையும்
சில நேரங்களில்
நம் ஸ்பரிசங்களையும்
ஒவ்வொரு முறையும்
நம் இதயங்களையும்
அருகம்புல்லைப் போல்
தானாகவே வளர்ந்திருந்தது
எனக்குள்ளும் உனக்குள்ளும்
நமக்குள்ளான நேசம்
மையலான மதியத்தில்
சோளக்காட்டுக்கிடையில்
நடந்த கண்ணாம்பூச்சி
விளையாட்டைக் கண்ட
சோளக்குருவிகள்
கண்மூடிக் கொண்டன
வெப்பமாக சூரியனும்
அதனினும் வெப்பமாக
நம் மூச்சுக்காற்றுகளும்
தேடிவிழையும்
கரங்களும்
கலைந்த தாவணியும்
கலையாத நினைவுகளுமாய்
இன்றும் என் மதியங்கள்
விடைபெற்றது
என் விடுமுறையும் தான்
மீண்டும் வருவேன்
மீட்டுச்சென்று
மீட்டுவேன்
உறுதி கூறினேன்
என் மார்பெல்லாம்
உன் கண்ணீர்
கனத்துப்போனது
நினைவுதாங்கியான என்
மனதும்தான்
சில மாதங்களில்
ஏதோ ஒரு விடுமுறை
உன்னைப்பார்க்க வேண்டும்
ஆவலில் வருகிறேன்
ஊரெல்லாம் தோரணம்
நான் வருவதை அறிந்து
விட்டாயா என்ன?
புன்னகையுடன் நடக்கிறேன்
எதிரில் ஊர்வலம் வருகிறது
ஓரமாய் ஒதுங்கி நிற்கிறேன்
அருகில் வரும்போதுதான்
பார்க்கிறேன்
மணக்கோலத்தில் நீ !