Tuesday, March 21, 2006

மீண்டும் ஒரு காதல் கவிதைஅது ஒரு கோடை விடுமுறை
நான் எனது பாட்டியின்
வீட்டில்

ஊரே நிறைந்திருக்கிறது
வீதியெங்கும் உயிருள்ள
மஞ்சள் மலர்களாய்
அலைந்து திரியும்
கோழிக்குஞ்சுகள்

கூட்டமேயில்லாத ஆடுகள்
மேயும் வீதிகள்
ரசித்துக் கொண்டே
நடக்கையில்
கிணற்று முற்றம்

அழகான தாவணியில்
அழகுகள் ததும்ப நீ
ததும்பாமல் நிறைவாய்
நீ சுமந்து வரும்
குடம்

கிணற்று நீர் போல்
கருமையான விழிகள்
அம்பு தைத்தாற்போல
கூர்நாசியில் மூக்குத்தி
இதழோரங்களில் லேசாக
வழிந்து கொண்டிருக்கும்
சிறு புன்னகை

“என்ன மாப்ளே
அப்படி பாக்கறவுக ?”
குரலினால் கலைந்தேன்
நீர் சேந்திக்கொண்டிருக்கும்
சித்தி ! தொடர்ந்தார்
“ம்ம் நடத்தும் ! “
நாணமானேன்
நீ சிரித்துக் கொண்டே
அவசரமாய் மறைகிறாய்
மாலை ஆதவனைப்போல்
வீதிகள் இருண்டன
எனக்கு மட்டும்


இப்படித்தான் ஆரம்பித்தது
பரிமாறிக்கொண்டோம்
பார்வைகளையும்
புத்தகங்களையும்
நீ சுட்ட பணியாரங்களையும்
சில நேரங்களில்
நம் ஸ்பரிசங்களையும்
ஒவ்வொரு முறையும்
நம் இதயங்களையும்

அருகம்புல்லைப் போல்
தானாகவே வளர்ந்திருந்தது
எனக்குள்ளும் உனக்குள்ளும்
நமக்குள்ளான நேசம்
மையலான மதியத்தில்
சோளக்காட்டுக்கிடையில்
நடந்த கண்ணாம்பூச்சி
விளையாட்டைக் கண்ட
சோளக்குருவிகள்
கண்மூடிக் கொண்டன

வெப்பமாக சூரியனும்
அதனினும் வெப்பமாக
நம் மூச்சுக்காற்றுகளும்
தேடிவிழையும்
கரங்களும்
கலைந்த தாவணியும்
கலையாத நினைவுகளுமாய்
இன்றும் என் மதியங்கள்

விடைபெற்றது
என் விடுமுறையும் தான்
மீண்டும் வருவேன்
மீட்டுச்சென்று
மீட்டுவேன்
உறுதி கூறினேன்
என் மார்பெல்லாம்
உன் கண்ணீர்
கனத்துப்போனது
நினைவுதாங்கியான என்
மனதும்தான்

சில மாதங்களில்
ஏதோ ஒரு விடுமுறை
உன்னைப்பார்க்க வேண்டும்
ஆவலில் வருகிறேன்
ஊரெல்லாம் தோரணம்
நான் வருவதை அறிந்து
விட்டாயா என்ன?
புன்னகையுடன் நடக்கிறேன்
எதிரில் ஊர்வலம் வருகிறது
ஓரமாய் ஒதுங்கி நிற்கிறேன்
அருகில் வரும்போதுதான்
பார்க்கிறேன்
மணக்கோலத்தில் நீ !

12 comments:

கைப்புள்ள said...

நல்ல கவிதை நவீன். கடைசியிலே அப்படியே மனசைப் பிழிஞ்சிட்டீங்களே...

Naveen Prakash said...

வாங்க கைப்புள்ளே
நன்றி பல !

Anonymous said...

ம் எனக்கு சின்னதா கோபம் வருது

அவளுக்கு எப்படித் தெரியும்
காதலுடனும் கவிதையுடனும்
அவள் நினைப்பில் தான் இவன்
இருக்கிறான் என்று?

சும்மா விட்டுட்டுப்போறது
அப்புறம்.. ஏமாற்றிட்டா அது இது என்று
கூறுகிறது.. ! :-)
போங்க நவீன் இதை நான் ஒத்துக்க மாட்டேன்!
:-)


கவிதை என்று பார்க்கும்போது
அழகான கவிதை.. எதார்த்தத்துடன் நிக்கின்றது
அருமை


நேசமுடன்..
-நித்தியா

Naveen Prakash said...

நித்தியா என்ன இப்படி சொல்லிட்டீங்க !

கோபிக்காதீர்கள் தயவு செய்து !

சில காதல்கள்
கல்யாணத்தில் முடிகிறது
சில கல்யாணங்கள்
காதலை முடிக்கிறது !

சரிதானே?

வந்தமைக்கும் தந்தமைக்கும்
மிக்க நன்றி !

சத்தியா said...

அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட்டீங்களே?

ஆனாலும் கவிதை நன்று. பாராட்டுக்கள் நவீன்.

Naveen Prakash said...

//அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட்டீங்களே? //

வாங்க சத்தியா ! சில சோகங்கள் அழகாய் இருக்கின்றன அல்லவா?? :)

Anonymous said...

superbbbbbbbbbbb
but yethai yethai o
gnabagapaduthuthu

Naveen Prakash said...

//Anonymous said...
superbbbbbbbbbbb
but yethai yethai o
gnabagapaduthuthu //

வாங்க அனானி ஞாபகங்கள் சிறகடிப்பதுதானே கவிதைகள் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !

தேவ் | Dev said...

நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் எப்படி படிக்க தவறினேன் என்று தெரியவில்லை.. கவிதை நடையில் ஒரு சிறுகதை எனச் சொல்லலாமா?

ஆற்று நீர் போல் அழகிய நடை கொண்ட அழகு கவிதை இது.

Naveen Prakash said...

//Dev said...
நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் எப்படி படிக்க தவறினேன் என்று தெரியவில்லை.. கவிதை நடையில் ஒரு சிறுகதை எனச் சொல்லலாமா?

ஆற்று நீர் போல் அழகிய நடை கொண்ட அழகு கவிதை இது.//

வாங்க தேவ் :) ம்ம்ம் கவிதை நடையில் ஒரு சிறு கதை :)
சிறுக(வி)தை நன்றாகத்தான் இருக்கிறது தேவ் :)) நன்றி !

Divya said...

மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,
அருமையான கவிதை நடையில் ஒரு காதல் கதை படித்த உணர்வு . பாராட்டுக்கள் நவீன்.

[எப்படி இவ்வளவு நாள் இந்த கவிதை நான் பார்க்கவில்லை என தெரியவில்லை.........தேவ் பார்க்க தவறியது போல் நானும் இவ்வளவு நாளும் பார்க்கவில்லை]

நவீன் ப்ரகாஷ் said...

//Divya said...
மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,
அருமையான கவிதை நடையில் ஒரு காதல் கதை படித்த உணர்வு . பாராட்டுக்கள் நவீன்.

[எப்படி இவ்வளவு நாள் இந்த கவிதை நான் பார்க்கவில்லை என தெரியவில்லை.........தேவ் பார்க்க தவறியது போல் நானும் இவ்வளவு நாளும் பார்க்கவில்லை]//

வாருங்கள் திவ்யா:)))
மிக்க நன்றி நீண்ட நாள் கடந்த சிறப்பான வருகைக்கும் நெகிழ்த்தும் வாழ்த்துக்கும் :)))